’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை!
ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய டி20 போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனை வித்தியாச மானதுதான்.
ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டி டெவன்டர் நகரில் நடந்தது. இதில் ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந் து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ஜார்ஜ் முன்ஷி 25 பந்துகளில் 46 ரன்களும் கோட்ஸர் 41 பந்தில் 54 ரன்களும் மேக்லியாட் 46 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஏழு ரன்கள் தேவைப்பட்டது. அனுபவ வீரர் கெவின் ஓ பிரையன் களத்தில் இருந்தார். சிறப்பாக பந்துவீசிய ஷெரீப், அவர் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த நான்கு பந்துகளில் நான்கு ரன்கள் கிடைத்தது.
கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவை. ஆனால், இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், போட்டி சமனில் முடிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு அந்த அணியும் 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிர்லிங் 41 பந்தில் 81 ரன்கள் விளாசினார்.
டி20 கிரிக்கெட்டில் ’டை’யில் முடிந்த முதல் போட்டி இதுதான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ’நாக் அவுட்’ போட்டிகளில் மட்டுமே, சூப்பர் ஒவர் முறையை பயன்படுத்த வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்ததால் இந்த ஆட்டத்தில் அந்த முறை பயன்படுத்த முடியவில்லை.
ஏற்கனவே ஒன்பது டி20 போட்டிகள் டையில் முடிந்துள்ளன. ஆனால், அவற்றில் சூப்பர் ஒவர் மற்றும் பந்துவீசி அவுட்டாக்கும் முறை (பவுல் அவுட்) பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.