சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மீது நாங்கள் இன்னும் அன்பும், அக்கறையும் வைத்துள்ளதாக கிரிக்கெட் வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து நேற்று மாலை 4 மணிக்கு மேல், சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்தும், தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடனும், தீவிர சோதனைக்கு பிறகு ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மைதானத்திற்குள் ரசிகர்கள் போல் வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் தங்கள் காலணி மற்றும் மேலாடையை கழட்டி வீசினர்.
இதனால் 2 நிமிடம் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த காலணியை ஜடேஜா கால்பந்து போல் உதைத்து விளையாடினார். தென்னாப்பிரிக்க வீரர் டூ ப்ளஸிஸ் அந்த காலணியை கையில் எடுத்துச்சென்றார். அப்போது அவர் வெளிப்படுத்திய முக பாவனை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியது.
இதுதொடர்பாக தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஜடேஜா, ‘இன்னும் சிஎஸ்கே ரசிகர்கள் மீது ஏராளமான அன்பும், அக்கறையும் வைத்துள்ளோம்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.