ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார் ஸ்மித்!

ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார் ஸ்மித்!
ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார் ஸ்மித்!

தடை காரணமாக, கடந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தங்கள் அணிக்கு தற்போது திரும்பியுள்ளனர்.

12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 23 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி த‌லைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் சர்வதேச போட்டிகளில் தடை விதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் களமிறங்குகின்றனர். 

தென்னாப்பிரிக்க தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் இவர்களுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த வருடம் நடந்த ஐபிஎல் போட்டியில் இவர்கள் பங்குபெறவில்லை. ஒரு வருட இடைவெளிக்கு பின் ஐபிஎல் தொடருக்கு வந்துள்ள அவர்களில் ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் வார்னர், சன் ரைசர் ஐதராபாத் அணியிலும் இணைகின்றனர்.

ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று இணைந்தார். அந்த அணியின் பயிற்சியாளர் ஷேன் வார்னர் கூறும்போது, ‘’ உலகக் கோப்பைக்கு முன், ஸ்மித்தும் வார்னரும் பங்குபெறும் தொடர் இது. இது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். இருவரும் சிறந்த வீரர்கள். ஸ்மித், ரன் பசியில் இருக்கிறார். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்’’ என்றார்.

மற்ற அணிகளைப் போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பயிற்சியை தொடங்கிவிட்டது. அந்த அணியில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் டர்னர், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக, மொகாலியில் நடந்த போட்டியில் மிரட்டினார். அவர் பாகிஸ்தான் லீக் போட்டியில் விளையாடி வருவதால் முதல் மூன்று போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற ஷேர் வார்ன், கடந்த வருடம் தங்கள் அணியில் அதிரடி காட்டிய வெளிநாட்டு வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்த வருடமும் மிரட்டுவார்கள் என்று நம்புவதாகச் சொன்னார். அதே நேரம் இந்திய வீரர்கள் ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சொல்கிறார் அவர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com