அடிலெய்ட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தும் ஸ்டீவ் ஸ்மித்

அடிலெய்ட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தும் ஸ்டீவ் ஸ்மித்
அடிலெய்ட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தும் ஸ்டீவ் ஸ்மித்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் அடங்கிய ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி அங்குள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார். 

கடந்த 2018-இல் ஆஸ்திரேலிய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டு காலம் விளையாட ஸ்மித்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு அவரது கேப்டன் பொறுப்பும் பறிக்கப்பட்டது. ஓராண்டு தடை முடிந்து சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார் அவர். இருப்பினும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. 

டிம் பெய்ன், டெஸ்ட் அணியையும், ஆரோன் ஃபின்ச் ஒருநாள் மற்றும் டி20 அணியையும் வழி நடத்தி வந்தார்கள். இதில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் கடந்த மாதம் டிம் பெய்ன் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அவர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். தொடர்ந்து பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஸ்மித், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் பேட் கம்மின்ஸ் வழிநடத்திய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு அருகில் இருந்த காரணத்தால் (Contact) தன்னை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கம்மின்ஸ். அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் இல்லாத சூழலில் துணை கேப்டன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அவர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது விவாதப் பொருளாகி உள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டை இம்முறை அவர் குலைக்காமல் இருந்தால் சரி என சொல்லப்படுகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com