நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித், தனது நீண்ட நாள் காதலி டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட் டிருக்கிறது. இந்நிலையில் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஸ்மித். இவர் தனது நீண்ட நாள் தோழி டேனி வில்லிஸ்.  செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக ஸ்மித் கூறியிருந்தார். அதன்படி அவரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எனது சிறந்த தோழியை திருமணம் செய்துள்ளேன். இது எனக்கு மறக்க முடியாத நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். உஸ்மான் கவாஜா, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், ஹென்ரிக்ஸ், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

காதல் மலர்ந்த கதை!

ஸ்மித்துக்கும் டேனி வில்லிஸ்-க்குமான காதல் மலர்ந்த கதை சுவாரஸ்யமானது. 2011-ம் ஆண்டு பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா பார்ட்டியில், டேனியை சந்தித்தார் ஸ்மித். ரொம்ப போரடிக்க, கொஞ்சம் பீரோடு இருந்தவருக்கு அவரைக் கண்டதுமே, ’யாருடா இது?’ என்று கேட்கத் தோன்றியது.

காதல் வழக்கப்படி, ‘நான் உன்னை விரும்பலை. உன்மேல ஆசைப்படலை, நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. ஆனா, இதெல்லாம் நடந்துருமோன்னு பயமாயிருக்கு’ என்று ’அலைபாயுதே’ மாதவன் மாதிரி மனதுக்குள் ஓடியது டயலாக்.

 டேனியும் ஸ்மித்தைக் கண்டதும் கொஞ்சம் அப்படி இப்படி ஆனார். ‘நீ நிதானமா இல்லை. கால் தரையில படலை. முதல்ல நில்லு. அப்புறம் வந்து சொல்லு’ என்று சொல்லத் தோன்றியது ஸ்மித்துக்கு!

இங்கு தொடங்கிய நட்பு, நட்பாகவே தொடர்ந்து கொண்டிருந்தது பல வருடங்களாக. தோழியோடுதான் எங்கும் செல்வார் ஸ்மித்தும். ஸ்மித் வலை பயிற்சியில் இருக்கும்போது அவருக்கு உதவி செய்பவர் டேனி. எப்படி? பவுலிங் மெஷினுக்குள் பந்தை போட்டு அதை இயக்குவது. 

இதுபற்றி ஒரு முறை டேனி சொல்லும்போது, ‘ஸ்மித்துக்கு கிரிக்கெட்தான் எப்பவும். எனக்கு கிரிக்கெட் பற்றி கொஞ்சம் தெரியும். நான் வீசுற பந்தை அவர் கொஞ்சம் தூரமா அடிச்சுட்டா எனக்கு கோபம் வரும்’ என்று ஜாலியாகச் சொல்லியிருக்கிறார். டேனி சட்டம் படித்தவர். ஸ்மித்தும், டேனியின் சட்டப் புத்தகத்தை வாசித்து சில அடிப்படை சட்ட விதிகளை தெரிந்து கொண்டிருக்கிறாராம்.

கடந்த வருடம் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா வந்தபோது ஸ்மித்துடன் டேனியும் உடன் வந்தார். விராத் கோலி உள்ளிட்ட சில இந்திய வீரர்களுக்கும் டேனி, அறிமுகம்.

’ஸ்மித் மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்கும்போது, உங்களுக்கு போரடிக்காதா?’ என்று கேட்டால், ‘ஆரம்பத்துல எனக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது. இப்ப ஓட்டல் ரூம்ல உட்கார்ந்து எப்பவும் டிவி-ல கிரிக்கெட்டையே பார்த்து பார்த்து நிறைய தெரிஞ்சு வச்சிருக்கேன்’ என்கிறார் டேனி.

இப்படி ஜாலியாக திகட்டத் திகட்டச் சுற்றிய பிறகும் காதலை சொல்லாமல் இருந்தால் எப்படி? கடந்த வருடம் காதலைச் சொல்லிவிடுவது என முடிவெடுத்தார் ஸ்மித். காலம் முழுவதும் கூட வரும் காதலை, பட்டென்று சொல்லிவிட முடியுமா? அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு பிளைட் பிடித்தார், டேனியுடன்.

நியூயார்க்கில் உள்ள மிக உயரமான ராக்ஃபெல்லர் மைய கட்டிடத்தின் உச்சியில் நின்று தன் காதலைச் சொன்னார் ஸ்மித். கூடவே செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று டேனியும் ஏற்றுக்கொண்டார். இது நடந்தது கடந்த வருட ஜூலையில். ராக்ஃபெல்லர் மையம் 19 வணிகக் கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு கட்டிடத் தொகுதி. 22 ஏக்கர் (89,000 சதுர மீட்டர்) பரப்பளவில் உள்ள இது அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னம் என்பது, சிறு குறிப்பு.

’டேனி வந்த பிறகுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையில நிறைய மாற்றம். நல்லா விளையாட ஆரம்பிச்சேன். இதுக்கு காரணம் அவங்கதான். அது எப்படின்னு எனக்குத் தெரியாது’ என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் ஸ்மித். 

மைக்கேல் கிளார்க் கேப்டன் பதவியில் இருந்து இறங்கியதும் அந்த வாய்ப்பு ஸ்மித்துக்கு கிடைத்தது. அப்போது பேசிய ஸ்மித், ‘எல்லாத்துக்கும் டேனிதான் காரணம். நான் எங்க இருந்தாலும் எனக்காக அவர் எப்போதும் இருக்கிறார்’ என்று சொன்னார். 

அந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com