தொடரை வென்ற அஃப்ரிடி அணி: சேவாக் அதிரடி வீண்

தொடரை வென்ற அஃப்ரிடி அணி: சேவாக் அதிரடி வீண்

தொடரை வென்ற அஃப்ரிடி அணி: சேவாக் அதிரடி வீண்
Published on

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் செயின்ட் மார்ட்ஸ் ஏரியில், சேவாக்கின் டைமண்ட்ஸ் அணி, ஷாகித் அஃப்ரிடியின் ராயல் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஐஸ் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டைமண்ட்ஸ் அணியில் சேவாக் (கேப்டன்), ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஜாகீர் கான், அஜித் அகர்கர், ஜெயவர்தனே, தில்சன், மலிங்கா, மைக்கேல் ஹசி, முகமது கயிப், ரமேஷ் பொவார், ஜொகிந்தர் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 

ராயல்ஸ் அணியில் ஸ்மித், மேட் பிரையர், கல்லிஸ், ஒவாயிஸ் ஷா, சாகித் அப்ரிடி (கேப்டன்), கிராண்ட் எலியட், அப்துல் ரசாக், டேனியல் வெட்டோரி, நாதன் மெக்கல்லம், சோயிப் அக்தர், ஏ.சி. ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த சேவாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. சைமன்ஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். முகமது கைஃயிப் 30 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். வீரேந்திர சேவாக் 22 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். ரசாக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 206 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஃப்ரிடி அணியில் ஜாக் காலிஸ் 37 பந்துகளில் 90 ரன்கள் அடிக்க, அந்த அணி 16.4 ஓவர்களில் வெற்றி பெற்றது. கிரம் ஸ்மித் 36 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இதனால், ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

நேற்று நடைபெற்ற முதல் போட்டியிலும், ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டைமண்ட்ஸ் அணியில், வீரேந்திர சேவாக் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வழக்கம் போல், தனது பாணியில் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்தார். 5 சிக்ஸர்களையும் விளாசினார். சேவாக்கிற்கு அடுத்தப்படியாக, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க டைமண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் அப்துல் ரசாக் 4 விக்கெட்களும், சோயிப் அக்தர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் அணி களமிறங்கியது. 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒவாயிஸ் ஷா 74 ரன்கள் (34 பந்து), எலியட் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com