3வது டெஸ்ட்: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் விலகல்
இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் விலகியுள்ளார்.
இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 405 ரன்கள் பின் தங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் காயமடைந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் பயிற்சியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் காயம் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஹெராத் விலகியுள்ளார். அவருக்கு பதில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக ஜெஃப்ரி வாண்டர்சே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.