தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டி காலேவில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி இலங்கை வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் கருணா ரத்னே மட்டும் நிலைத்து நின்று 158 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
தென்னாப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் ஷம்சி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். காயத்தில் இருந்து மீண்டு நீண்ட இடை வெளிக்குப் பின் அணியில் இணைந்திருக்கிற ஸ்டெயின் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சுழல்பந்துவீச்சுக்கு எதிராக அந்த அணி வீரர்கள் திண்டாடினர். கேப்டன் டுபிளிசிஸ் மட்டும் போராடி 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 54.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது தென்னாப்பிரிக்கா.
இலங்கை தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும் லக்மல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.