இலங்கையில் அவசர நிலை: கிரிக்கெட் போட்டி நடக்குமா?
இலங்கையில் திடீர் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று கிரிக்கெட் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் உள்ள கண்டி அருகே கடந்த மாதம் 22 ம் தேதி இளைஞர் ஒருவர் வழிமறித்துத் தாக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவருக்கு சொந்தமான கடைக்கு, ஒரு கும்பல் தீ வைத்தது. இதனால் அங்கு மதக் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலவரம் அக்கம் பக்கத்து பகுதிகளுக்கும் தொடர்ந்து வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அங்கு இன்று தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுகிறது. இந்த அவசரநிலை காரணமாக கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இதுபற்றி இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘அவசர நிலை கண்டி பகுதிகளில்தான் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் கொழும்பு பகுதியில் பிரச்னை ஏதும் இல்லாததால் போட்டி கண்டிப்பாக நடக்கும்’ என்று தெரிவித்தார்.