பாலியல் வன்கொடுமை: குணதிலகாவுக்கு ஜாமீன் மறுப்பு; இலங்கை கிரிக்கெட் வாரியம் சொல்வது என்ன?

பாலியல் வன்கொடுமை: குணதிலகாவுக்கு ஜாமீன் மறுப்பு; இலங்கை கிரிக்கெட் வாரியம் சொல்வது என்ன?
பாலியல் வன்கொடுமை: குணதிலகாவுக்கு ஜாமீன் மறுப்பு; இலங்கை கிரிக்கெட் வாரியம் சொல்வது என்ன?

பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை வீரர் குணதிலகாவை அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

31 வயதான இலங்கை கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் வீரர் தனுஷ்கா குணதிலகா, தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடுவதற்காக தேர்வாகி அந்த அணியுடன் அங்கு சென்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் தொடரில் இருந்து வெளியேறினார். எனினும் நாட்டிற்கு திரும்பாமல் அங்கேயே இருந்த நிலையில், ஆன்லைன் 'டேட்டிங் ஆப்' மூலம் 29 வயது இளம்பெண்ணுடன் பழகியதாகவும், அந்த பெண்ணை கடந்த 2-ந் தேதி சிட்னியில் ரோஸ் பே பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அந்தப் பெண்ணின் அனுமதியின்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதுமட்டுமின்றி இது தொடர்பாக அந்தப் பெண் நியூ சவுத் வேல்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து நேற்று அதிகாலை தனுஷ்கா குணதிலகா கைதுசெய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியநிலையில், ஜாமீன் கோரி தனுஷ்கா குணதிலகா, ஆஸ்திரேலியா கீழமை நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குணதிலகாவை அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இனிவரும் தொடர்களின் அணித் தேர்வில் அவரை பரிசீலிக்கப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தெரிவித்துள்ளதாவது, குணதிலகா மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது குறித்து உடனடியாக விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் எடுக்கும். மேலும் ஆஸ்திரேலியா நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த வீரர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு வீரர் இவ்வாறு நடந்துக்கொள்வதை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் அனுமதிக்காது, சகித்துக்கொள்ளாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அத்துடன் இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள ஆஸ்திரேலிய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு தேர்வாகாமல் வெளியேறிய நிலையில், தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே தற்போது இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை விட்டு புறப்பட்டு சென்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com