முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி 20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் நேற்று மோதின.
முதலில் பேட் செய்த இந்திய அணி, இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு, 174 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்காமலும் சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தாலும் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். மணீஷ் பாண்டே 37, ரிஷப் பன்ட் 23, தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ரன்கள் எடுத்தனர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குஷல் பெரேரா 66 ரன்களும், திசாரா பெரேரா 22 ரன்களும் எடுத்தனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சேஹல் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 3.3 ஓவரில் 42 ரன்களை வாரி வழங்கினார். ஆட்ட நாயகன் விருது குஷல் பெரேராவுக்கு வழங்கப்பட்டது.
போட்டிக்கு பின் பேசிய ரோகித் ஷர்மா, ’இந்தப் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. அவர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் கவுரவமான ஸ்கோரை எடுத்திருந்தாலும் எளிதாக அவர்கள் வென்றுவிட்டார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் முயன்றார்கள். சில நேரம் நாம் நினைப்பது போல நடப்பது இல்லை. எங்கள் பந்துவீச்சாளர்களிடம் நல்ல அனுபவம் இருக்கிறது. இருந்தாலும் சர்வதேச போட்டிக்கு அவர்கள் புதிதுதான். இந்தப் போட்டியில் வெல்வோம் என்று அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். எங்கள் திட்டத்தை சரியாகச் செயல்படுத்த தவறிவிட்டோம். இருந்தாலும் தவறுகளில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். இது போன்ற தட்டையான ஆடுகளத்தில் இன்னும் அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும். எங்களிடமும் சிறப்பான பேட்டிங் வரிசை இருக்கிறது. அடுத்தப் போட்டிகளில் வலிமையாக திரும்ப வருவோம்’ என்றார்.