வீரர்களை அடிக்கடி மாற்றினால் எப்படி? இலங்கை பயிற்சியாளர் டென்ஷன்!
வீரர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தால் போட்டியில் வெல்வது கடினம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை பட்டியலில் இலங்கை அணி 8-வது இடத்தில் இருக்கிறது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும்.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால், புள்ளி எண்ணிக்கை உயர்ந்து, 8-வது இடத்தில் நீடிக்கும். இதில் நீடித்தால்தான் உலக கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி பெறும். இதனால் இலங்கை கிரிக்கெட் அணி நெருக்கடியில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இழந்த அந்த அணி, முதல் ஒரு நாள் போட்டியிலும் மோசமாக தோற்றது. இதையடுத்து அந்த அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இலங்கை அணியின் பயிற்சியாளராக கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றுள்ள நிக் போதாஸ் கூறும்போது, ’இலங்கை அணியின் தோல்வி காரணமாக உங்களுக்கு கோபம் வருகிறதா? எனக்கு வரவில்லை. ஏனென்றால் வீரர்கள் சிறப்பாக பயிற்சி பெறுகிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. அணியில் அடிக்கடி மாற்றங்கள் செய்துகொண்டிருந்தால் மனரீதியாக வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களின் நம்பிக்கை போய்விடும். வீரர்கள் நிலையாக இருந்தால்தான் முன்னேற்றத்தைக் காண முடியும்’ என்றார்.