மும்பை- ஐதராபாத் மீண்டும் மோதல்: தவான் ஃபிட், புவனேஷ்வர் காயம்!
ஐபிஎல் போட்டியில் ஐதராபாத்- மும்பை அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் காயமடைந்துள்ளதால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
பதினோறாவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே கடந்த 12-ம் தேதி இந்த அணிகள் மோதின. இதில் திரில் வெற்றி பெற்றிருந்தது ஐதராபாத். அந்த தோல்விக்கு பழி வாங்கக் காத்திருக்கிறது மும்பை.
மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அவ்வப்போது அதிரடி காட்டி மிரட்டுகிறார். கேப்டன் ரோகித், பெங்களூருக்கு எதிரான போட்டியில் 95 ரன்கள் குவித்தார். ஆனால், அதற்கு முந்தைய போட்டிகளிலும் அடுத்த போட்டியிலும் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆல்ரவுண்டர் பொல்லார்ட் ஃபார்மில் இல்லை. ஹர்திக் பாண்ட்யா, பந்துவீச்சில் கவனம் செலுத்தினாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை. அவரது சகோதரர் குணால் பாண்ட்யாவும் அப்படியே. பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூர் ரகுமான், மார்கண்டே, குணால் ஆகியோர் சிறப்பாக வீசி விக்கெட் வீழ்த்தி வருகின்றனர். இருந்தும் அந்த அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பற்றி எல்லோரும் பேசிவருகிறார்கள். ஆனால் பேட்டிங்கிலும் நாங்கள் கிங் என்பதை சென்னைக்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்கள். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அந்த அணி சிறப்பாக செய்ல்படு கிறது. சிஎஸ்கே-வுக்கு எதிரானப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் கேப்டன் கேன் வில்லியம்சன், யூசுப் பதான், ரஷித் கான் ஆகியோர் மிரட்டினார்கள். காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத ஷிகர் தவான் இந்த போட்டியில் களமிறங்குகிறார். ஆனால், ஐதராபாத் அணியின் தூணாக விளங்கும் புவனேஷ்வர்குமார் காயம் அடைந்துள்ளார். முதுகு வலியால் அவதிப்படும் அவர், இந்த போட்டியில் விளையாடவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவு. இருந்தாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டேன்லெக், சித்தார்த் கவுல் ஆகியோர் பந்துவீச்சில் கலக்கி வருகிறார்கள்.
கடந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வி கண்டிருந்தது மும்பை அணி. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக களமிறங்க துடிக்கிறது. அதோடு புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் மும்பை அணி அடுத்தவரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டயாயத்தில் இருக்கிறது. அதே நேரம் அடுத்த வெற்றியை பதிவு செய்ய ஐதராபாத் தீவிரம் காட்டுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.