கடைசி ஓவரின் ஒவ்வொரு பந்தும் ’ஷார்ப் யார்க்கர்’ - நடராஜனை வியக்கும் முன்னாள் வீரர்கள்!
அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். விராட் கோலி, தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியிருக்கிறார். துள்ளியமான யார்க்கர் பந்துவீச்சின் மூலம் யார்க்கர் நடராஜன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த சீசனில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நடராஜன் டெத் ஓவர்களில் அட்டகாசமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை கடைசி நேரத்தில் ரன் குவிக்க விடாமல் தடுத்து மேஜிக் செய்கிறார்.
அந்த யார்க்கர் மேஜிக்கை இன்றும் அவர் நிகழ்த்தி இருக்கிறார். டாஸ் வென்று பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது. டெல்லி அணி எப்படியும் 200 ரன்களை எட்டும் என்ற நிலையில், நடராஜனை நம்பி கடைசி ஓவரை வீச அனுமதித்தார் கேப்டன் வார்னர்.
அவரும் கேப்டனின் செல்லப்பிள்ளையாக இருபதாவது ஓவரை வீசி வெறும் 7 ரன்களை மட்டுமே லீக் செய்தார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை டெல்லி பேட்ஸ்மேன்கள். அனைத்து பந்தையும் ஃபுல் லெந்த் டெலிவரியாக வீசி மாஸ் காட்டினார் நடராஜன். அதாவது ஒரு பந்துவிடாமல் அனைத்தும் யார்க்கர் தான். களத்தில் நின்ற அதிரடி ஆட்டக்காரர்களான ஹெட்மயர், ரிஷப் பண்ட் இருவராலும் ரன் விளாசவே முடியவில்லை.
நடராஜனின் இந்த கடைசி ஓவரை மெச்சி ரசிகர்களும், முன்னாள் வீரர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது பாராட்டுகளை பொழிந்து வருகின்றனர். இந்திய அணியில் பும்ரா உடன் இணைந்து விரைவில் அவரும் 10 ஓவர்களை வீசுவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
“என்னா பந்துவீச்சு… சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய அனுபவமில்லாத வீரர்கள் யாருமே நடராஜன் போல துல்லியமாக யார்க்கர் வீசி நான் பார்த்ததே இல்லை” என ட்வீட் செய்து நடராஜனை புகழ்ந்துள்ளார் நடராஜன்.
மலிங்கா மாதிரியான பவுலர்களால் மட்டுமே இது போன்ற யார்க்கர்களை வீச முடியும் எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.