"என் அம்மாவுடன் இப்போது நிறைய நேரம் செலவிடுகிறேன்" - சச்சின் டெண்டுல்கர் !

"என் அம்மாவுடன் இப்போது நிறைய நேரம் செலவிடுகிறேன்" - சச்சின் டெண்டுல்கர் !
"என் அம்மாவுடன் இப்போது நிறைய நேரம் செலவிடுகிறேன்"  - சச்சின் டெண்டுல்கர் !

ஊரடங்கு காலத்தில்தான் என் தாயாருடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ள சச்சின், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அவரின் சாதனைகள் இப்போது வரை முறிக்கப்படாமல்தான் இருக்கிறது. 2013 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சச்சினின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 தன்னுடைய பிறந்தநாளையொட்டி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள சச்சின் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் ”இந்த ஊரடங்கு கால அனுபவங்களைப் பகிர்ந்த அவர் "என்னுடைய தினசரி நாள் உடற்பயிற்சியுடன் தொடங்கும். பின்பு என்னுடைய அகாடெமி தொடர்பான வேலைகளில் பிஸியாக இருப்பேன். இப்போது ஊரடங்கு இருப்பதால் எங்கேயும் வெளியே செல்வதில்லை. என் மனைவி மற்றும் மகன், மகள்களுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இப்போதுதான் என் அம்மாவுடன் அதிக நேரம் செலவழிக்கிறேன்" என்கிறார்.

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் "ஊரடங்கு நாள்களில் கேம்ஸ் விளையாடுவது, திரைப்படங்கள், டிவி சீரியல்கள் பார்ப்பது. பின்பு இசையைக் கேட்பது. 1970களில் தொடங்கி இப்போது வந்திருக்கும் இசை முழுவதும் நான் கேட்பேன். நான் எந்தப் பாடலை கேட்க வேண்டும் என்பதை என் பிள்ளைகள்தான் முடிவு செய்வார்கள். அவர்களுடன் பழகும்போது அவர்களின் ரசனையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மேலும், அவர்கள் என் ரசனை என்னவென்று ஏற்கெனவே அறிந்தும் வைத்திருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

 ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு யோசனை சொல்லியுள்ள சச்சின் "இது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் கடினமான காலம்தான். இந்தக் காலகட்டத்தில் உடற் தகுதியில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் மனோபலத்தையும் அதிகரிக்க வேண்டும். இந்தக் காலகட்டம் எதிர்காலத்தில் வீரர்களுக்கு நல்ல பயனைக் கொடுக்கும். இந்த நாட்களும் கடந்து போகும் என்று நினைத்து, வர இருக்கும் எதிர்காலச் சவால்களுக்கு நம்மை மேன்மைப்படுத்தி தயாராக இருக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com