மின்னல் வேக மனிதன் : உசைன் போல்ட் : பிறந்த நாள் இன்று

மின்னல் வேக மனிதன் : உசைன் போல்ட் : பிறந்த நாள் இன்று
மின்னல் வேக மனிதன் : உசைன் போல்ட் : பிறந்த நாள் இன்று

தான் பங்கேற்ற ஒலிம்பிக், உலக தடகள போட்டிகள் என அனைத்திலும் தங்க பதக்கம் வென்று சாதனையாளராக சுமார் பத்து ஆண்டு காலம் சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகளின் ஜாம்பவானாகவும், சாம்பியனாகவும் திகழ்ந்து 'உலகின் மின்னல் வேக மனிதன்' என உலக மக்கள் அனைவரும் செல்லமாக அழைக்கும் தடகள வீரரான உசைன் போல்ட்டிற்கு பிறந்த நாள். 

ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள குக்கிராமத்தில் 1986ஆம் ஆண்டில் இதே நாளில் பிறந்தவர் உசைன் போல்ட். அந்த கிராமத்தில் பழசரக்கு கடை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்துள்ளனர் போல்ட்டின் பெற்றோர். 

எல்லா பிள்ளைகளையும் போலவே பள்ளி நேரம் போக தனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தில் கிரிக்கெட் மற்றும் புட்பால்  விளையாட்டை தன் சகோதரருடன் சேர்ந்து விளையாடி வந்துள்ளார் போல்ட். பள்ளி அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் முதல் ஆளாக பெயர் கொடுத்து ஆர்வமாக விளையாடி வந்துள்ளார் போல்ட். தடகள போட்டியில் போல்ட்டின் ஓட்டத்தை பார்த்து வியந்து போன அவரது கிரிக்கெட் கோச் தான் போல்ட்டை தடகள விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த சொல்லியுள்ளார். வாத்தியாரின் சொல்லை தட்டாமல் தடகள போட்டியில் கவனம் செலுத்த துவங்கியது 15 வயதில் தான்.

அதன் மூலம் தொடர்ச்சியாக பள்ளி அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் முதலாவதாக இடம் பிடித்து பல சாதனைகளை படைத்து வந்துள்ளார் போல்ட். அவரது ஓட்ட திறன் குறித்து கேள்விப்பட்ட ஜமைக்காவின் தலைசிறந்த தடகள கோச் ஒருவர் போல்ட்டுக்கு பயிற்சி கொடுக்க, அசராமல் பயிற்சிக்கு ஈடு கொடுத்து நாள்தோறும் பல ஆயிரம் மீட்டர்கள் ஓடி பயிற்சி செய்துள்ளார் போல்ட். 

2002இல் ஜமைக்காவில் நடைபெற்ற இளையோருக்கான சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்று 200 மீட்டரில் தங்கமும், 400 மீட்டர் ரிலேவில் வெள்ளியும் வென்று சாதனை படைத்துள்ளார் போல்ட். அந்த போட்டியில் அவர் பங்கேற்கும் போது போல்ட்டிற்கு 16 வயது தான். இருந்தாலும் 200 மீட்டர் தூரத்தை 20 நொடிகளுக்குள் கடந்து புதிய உலக சாதனையை படைத்திருந்தார். அதன் பின்னர் 100, 200, 400 மீட்டர் என தான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் ட்ரேக்கில் இறங்கும் போதெல்லாம் தனது முந்தைய சாதனையை முறியடித்து சிறந்த பர்பாமன்ஸை காட்டியுள்ளார். 

தான் ஒரு பந்தைய குதிரையாக களத்தில் வெற்றி பெறும் போது பாராட்டு பெறுவதை காட்டிலும் தோல்வியை தழுவும் போதெல்லாம் மன உளைச்சலை எதிர்கொண்டுள்ளார் 16 வயதான போல்ட். அந்த நேரத்தில் அவரது நண்பர்களும், குடும்பமும் தான் அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளது.

அந்த சூழலில் தான் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 2008இல் நடைபெற்ற தடகள போட்டி ஒன்றில் 100 மீட்டர் தூரத்தை 9.72 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனையை  படைத்தார் போல்ட். 

அந்த சாதனையினால் அதுவரை ஜமைக்கா நாடு மட்டுமே அறிந்திருந்த போல்ட்டை உலக மக்கள் அறிந்து கொண்டனர். உலகின் அத்தனை மொழிகளிலும் போல்ட்டின் சாதனை செய்திகளாக வெளியாகி இருந்தது.

அந்த செய்தி அடங்குவதற்குள் அதே ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தன் தாய் நாட்டிற்காக களம் இறங்கினார் போல்ட். 

போல்ட்டின் சாதனை குறித்து அறிந்திருந்த மக்கள் அவர் ட்ரேக்கில் இறங்கியவுடன் 'கமான் போல்ட்' என ஊக்கம் கொடுக்க 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ரிலே என போல்ட் ஓடிய  மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு தனது முந்தைய டைமிங் ரெக்கார்டை முறியடித்து பெஸ்ட் டைமிங் கொடுத்து புதிய உலக சாதனை படைத்தார். 

2008, 2012, 2016 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு தங்க பதக்கங்களை வென்று சாதனையாளராக  உருவெடுத்தார். சர்வதேச அளவில் நடைபெற்ற தடகள போட்டியிலும் போல்ட்டின் வெற்றி பயணம் தொடர்ந்தது. அதன் மூலம் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு 'உலகின் சிறந்த தடகள வீரர்' பட்டத்தையும் கொடுத்து போல்ட்டை கெளவுரித்தது சர்வதேச தடகள கூட்டமைப்பு.

உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கு போல்ட் ரோல் மாடலானார். நம் இந்தியாவிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது அவர் இந்திய வந்திருந்த போது காண முடிந்தது.

அப்படி சாதனை மேல் சாதனை படைத்து வந்த போல்ட்டின் தடகள வாழ்வில் திடீர் திருப்பமாக அமைந்தது லண்டனில் நடைபெற்ற தடகள போட்டியின் தோல்வி. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 'நான் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி' என போல்ட் அறிவித்திருந்தார். அந்த போட்டியில் மூன்றாவதாக இடம் பிடித்து வெண்கலம் வென்றார் உசைன் போல்ட். யாராலும் வெல்ல முடியாத போல்ட்டை  காட்லின் வென்றதும் தடைகள வீரருக்கே உள்ள பாணியில் போல்ட்டின் கால்களுக்கு முன்னர் மண்டியிட்டு தன் வெற்றியை சமர்ப்பித்தார். போல்ட்டும் தனது தோல்வியை அசால்ட்டாக எடுத்து கொண்டு காட்லினை ஆரத்தழுவி பாராட்டி விட்டு சென்றார் போல்ட். 

சிறு வயதில் நான் பெற்ற தோல்வி தான் என்னை வெற்றியாளனாக உருவாக்கியது" என் குட்பை சொன்னார் உசைன் போல்ட்.

வழக்கமாக உலக அளவில் நடைபெறும் தடகள போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்கள் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை அடையாளத்தில் இருப்பர். அதன் பின்னர் அவரை வெல்ல முன்னாள் சாம்பியன்கள் காற்றோடு காற்றாக கலந்து விடும் சூழலில் சுமார் பத்து ஆண்டு காலம் சர்வதேச பந்தய களத்தில் கில்லியாக நின்று விளையாடி ஒவ்வொரு பதக்கத்தையும் சொல்லி அடித்தவர் போல்ட் மட்டும் தான். தடகளத்தில் அவருக்கு நிகர் அவர் தான்.

ஹேப்பி பர்த் டே போல்ட்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com