முதலில் ஐபிஎல்... அப்புறம் இந்தியா... - அசத்தி வரும் தமிழக வீரர்கள்!

முதலில் ஐபிஎல்... அப்புறம் இந்தியா... - அசத்தி வரும் தமிழக வீரர்கள்!

முதலில் ஐபிஎல்... அப்புறம் இந்தியா... - அசத்தி வரும் தமிழக வீரர்கள்!
Published on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களிக்கும் விளையாட்டாக ஐபிஎல் உள்ளது. அதிக வருவாய் ஈட்டிதரும் போட்டியாகவும் இது உள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் எட்டு அணிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஏலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2008-ஆம் ஆண்டில் முதலாவதாக தொடங்கிய ஐபிஎல் ஏலம் இன்றுவரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஓர் அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். அதில் 8 வெளிநாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படலாம். ஒவ்வொரு வீரருக்கும் அடிப்படை விலை என்பது உள்ளது. அந்த அடிப்படை விலையில் இருந்து தொடங்கும் ஏலத்தில் அதிக விலையைக் கோரும் எந்தவொரு அணிக்கும் அந்த வீரர் தேர்வாகிவிடுவார்.

அதுவே, ஒரு வீரரை யாருமே ஏலத்தில் எடுக்காவிட்டால், அவர் ஏலமெடுக்காதவர் பட்டியலுக்குள் வந்துவிடுவார். எல்லா வீரர்களும் ஏலத்தில் எடுத்து முடிக்கப்பட்டவுடன் ஏலம் எடுக்கப்படாத வீரர்களின் பெயர்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இரண்டாவது சுற்றில் அவர்கள் அணியில் சேரும் வாய்ப்பும் உருவாகும். இவ்வாறுதான் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஐபிஎல் விளையாட்டு மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தனது நாட்டிற்கான அணியில் இடம்பெற்ற வீரர்கள் ஏராளம். அந்த வகையில் ஐபிஎல்-லில் திறமையை வெளிக்கொணர்ந்து இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்கள் பலர் உள்ளனர். இன்று பலராலும் திறமையான சுழற்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2010-ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வாகி விளையாடியவர்தான். அதன் மூலம் அவரின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கரும் உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர் டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடினார். இதன்மூலம்தான் 2017ஆம் ஆண்டு இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களாக தேர்வான வருண்சக்ரவர்த்தி, நடராஜன் ஆகியோரும் ஐபிஎல் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியே இந்திய டீமில் நுழைந்தனர். சென்னையில் வியாழக்கிழமை நடந்த ஏலம் நிகழ்வின் தொடக்கத்தில் கூட, முதலில் நடராஜனின் திறமை குறித்து மேற்கோள்காட்டப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது. இவ்வாறு இளம் வீரர்களுக்கும் ஆரம்பகால கட்ட வீரர்களுக்கும் ஒரு பூஸ்ட் எனர்ஜியாக ஐபிஎல் விளங்குகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கடந்த ஐபிஎல் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் நுழைந்த சேலத்தைச் சேர்ந்த நடராஜன். இதனால் தமிழக வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில வீரர்களும் ஐபிஎல்லில் தங்களது திறமையை நிரூபிக்க பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை ஐபிஎல் போட்டிக்காக அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஜெகதீசன், முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். இதில் புதிதாக, ஷாருக்கான், ஹரி நிசாந்த், மணிமாறன் சித்தார்த் ஆகியோர் ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஹரி நிஷாந்த் பேசுகையில், "ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்னால் தற்போது வரை இதை உணர முடியவில்லை. கோவையை சேர்ந்த ஜெகதீசன் ஏற்கெனவே அணியில் இருப்பது நிச்சயம் உதவியாக இருக்கும், சிறு வயதில் இருந்து இருவரும் சேர்ந்து விளையாடி உள்ளோம். தோனியை காண வேண்டும் என்பது என் கனவு, தற்போது அவருடன் விளையாட போகிறோம் என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. வாய்ப்புகள் அனைத்துமே அனுபவம் தரும். அதனால் ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும் போதும் சிறப்பாக செயல்பட வேண்டும். சென்னை அணியில் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை, இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

டெல்லி அணிக்காக தேர்வாகியுள்ள தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ரவி அஸ்வின் டெல்லி அணியில் இருப்பதால் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அவருடன் இணைந்து டெல்லி அணியில் பயணிக்க இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. முன்பு கொல்கத்தா அணியில் தேர்வாகி இருந்தேன், ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்காத சூழலிலும் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன், இந்த முறை சிறப்பாக செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com