“நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” - தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணியை கேப்டனாக அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் டூப்ளசிஸ் வழிநடத்தி உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் டூப்ளசிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2012இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 சதங்களும், 21 அரை சதங்களும் விளாசியுள்ளார்.
“நான் இந்த தெளிவான மனநிலையில் தான் எடுத்துள்ளேன். அடுத்த அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்க இதுவே சரியான தருணம். என் தாய்நாட்டுக்காக கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாட எனக்கு கிடைத்த வாய்ப்பை கவுரவமாக பார்க்கிறேன். ஆனால் இப்போது நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளன. அதற்கு என்னை ஆயத்தப்படுத்த உள்ளேன்” என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தனது முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் டூப்ளசிஸ்.