தென்னாப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி மழையால் ரத்து
தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான உலகக் கோப்பை போட்டி மழையால் ரத்தானது.
உலகக் கோப்பை தொடரின் 15வது லீக் போட்டி இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இங்கிலாந்தில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி முதல் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்லா 6 (7) ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த மார்க்ரம் 5 (10) ரன்களில் அவுட் ஆகினார். 28 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு விக்கெட்டுகளையும் காட்ரெல் கைப்பற்றினார். அப்போதே மழையும் தொடங்கியது. 7.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 29 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மழை நிற்காததாலும், மைதானத்தின் நிலை மோசமடைந்ததாலும் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.