227 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா - சுழலில் மிரட்டிய சாஹல்
இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 227 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 8வது லீக் போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அம்லா 6 (9) ரன்களிலும், டி காக் 10 (17) ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டு பிளசிஸ் மற்றும் வேன் டெர் டஸன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் சாஹல் வீசிய சுழலில் டு பிளசிஸ் 38 (54) ரன்களிலும், டஸன் 22 (37) ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த மில்லர் 31 (40), பெஹ்லுக்வயோ 34 (61), கிரிஸ் மோரிஸ் 42 (34) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 31 (35) ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு தென்னாப்பிரிக்க அணி 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய சாஹல் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, புவனேஸ்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப் ஒரு விக்கெட்டையும் சாய்த்தார்.