உமேஷ், ஷமி கலக்கல்: திக்கித் திணறுது தென்னாப்பிரிக்கா

உமேஷ், ஷமி கலக்கல்: திக்கித் திணறுது தென்னாப்பிரிக்கா
உமேஷ், ஷமி கலக்கல்: திக்கித் திணறுது தென்னாப்பிரிக்கா

உமேஷ் யாதவ், முகமது ஷமியின் சிறப்பான பந்துவீச்சால், தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 108 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது, தென்னாப்பிரிக்க அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்க்ரம் (0), டீன் எல்கர் (6) ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். பவுமா (8 ரன்), முகமது ஷமியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. புருயினும் நார்ஜேவும் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஸ்கோர் 41 ஆக இருந்தபோது, நார்ஜே (3), முகமது ஷமி பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் டுபிளிசிஸ் வந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த புருயின் (30) விக்கெட்டை உமேஷ் யாதவ் சாய்த்தார். அவர் ஆட்டமிழந்ததை அடுத்து 53 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது, தென்னாப்பிரிக்க அணி. 

பின்னர் டுபிளிசிஸுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் டி காக். இருவரும் அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய டுபிளிசிஸ் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 128 ஆக இருந்தபோது, டி காக்-கை போல்டாக்கினார் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின். அவர் 31 ரன்கள் எடுத்திருந்தார். அவரை அடுத்து வந்த முத்துசாமி, டுபிளிசிஸுடன் ஜோடி சேர்ந்தார். 

உணவு இடைவேளை வரை அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளிசிஸ் 52 ரன்களுடனும் முத்துசாமி 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com