சேஹலை சமாளிக்க இந்திய ஸ்பின்னரை அழைத்த தென்னாப்பிரிக்கா!

சேஹலை சமாளிக்க இந்திய ஸ்பின்னரை அழைத்த தென்னாப்பிரிக்கா!

சேஹலை சமாளிக்க இந்திய ஸ்பின்னரை அழைத்த தென்னாப்பிரிக்கா!
Published on

சேஹல், குல்தீப் யாதவ் சுழல்களைச் சமாளிக்க தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்திய ஸ்பின்னர் ஒருவரை அழைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந் நிலையில் 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. 

இந்தத் தொடரில் மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் சேஹல், குல்தீப் யாதவ் பந்துவீச்சுகளை சமாளிக்கத் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறி வருகிறார்கள். விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வருகிறார்கள். இவர்களை சமாளிக்க இந்திய சுழல் பந்துவீச்சாளரிடம் பயிற்சிப் பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஜய் ராஜ்புத். ரஞ்சி வீரரான இந்தச் சுழற்பந்துவீச்சாளர் இப்போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்தப் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் இவர் என்பதால் இவரை அழைத்த ஜோகன்னஸ்பர்க் கிரிக்கெட் கிளப், அந்நாட்டு வீரர்களுக்கு வலை பயிற்சியில் பந்துவீசக் கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நேற்று பந்துவீசினார். மார்க்ரம், டுமினி, ஆம்லா ஆகியோர் நீண்ட நேரம் இவர் பந்துவீச்சில் பயிற்சிப் பெற்றனர்.

இதுபற்றி அஜய் ராஜ்புத் கூறும்போது, ’கடந்த 5 வருடமாக தென்னாப்பிரிக்க லீக் போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஜோகன்னஸ்பர்க் கிரிக்கெட் கிளப் சேர்மன் என்னிடம், பந்துவீசக் கேட்டுக்கொண்டார். அவர்கள் கேட்டுக்கொண்டபடி பந்துவீசினேன். சேஹல், குல்தீப் ஆகியோர் வீசுவது போல பந்தை மெதுவாக வீசச் சொன்னார்கள். அதன்படி வீசினேன்’ என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com