“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி
உலகக் கோப்பை தொடரில் தோனியின் ஆட்டம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் கடந்த சனிக்கிழமை மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் பேட்டிங் சற்று மோசமாக இருந்தது. குறிப்பாக தோனி-கேதார் ஜாதவ் இணை மிகவும் மந்தமாக விளையாடியதாக விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் இந்தப் போட்டியில் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். எனவே தோனியின் ஆட்டம் மிகவும் ஸ்லோவாக இருந்தது என்று பலர் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தோனிக்கு ஆதரவு அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “தோனி மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். இந்த உலகக் கோப்பை தொடரிலேயே தோனி தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு ஆட்டத்தின் மூலம் பதிலளிப்பார். ஒரு போட்டியில்தான் அவர் சரியாக விளையாடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், “ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சரியாக பேட்டிங் செய்யவில்லை. குறிப்பாக அந்தப் போட்டியில் 34 ஓவர்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தனர். அதில் இந்தியா வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்தது. மேலும் தோனி-கேதார் ஜாதவ் ஜோடி மிகவும் மந்தமாக விளையாடினர்” எனத் தெரிவித்திருந்தார்.