“இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”- கதறும் கிரிக்கெட் வீரர்கள்

“இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”- கதறும் கிரிக்கெட் வீரர்கள்
“இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”- கதறும் கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட்டிற்கு இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக பிசிசிஐ நோட்டீஸ் அளித்ததற்கு சவுரவ் கங்குலி சாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி டி.கே.ஜெயின் இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த நோட்டீஸில் திராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிந்து வரும் போது எவ்வாறு இந்தியா சிமெண்ட்ஸில் துணை தலைவராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியா சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. எனவே இது குறித்து திராவிட் விளக்கம் அளிக்க 2 வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பதவி ஆதாயம் என்ற பிரச்னை புதிதாக கிளப்பப்பட்டு வருகிறது. இது செய்திகளில் வலம் வர புதிய வழியாக உள்ளது. இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ராகுல் திராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 

இவரின் பதிவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “இந்திய கிரிக்கெட் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ராகுல் திராவிட்டை விட பொறுத்தமான நபர் இந்திய கிரிக்கெட்டில் இருக்க முடியாது. இது போன்று முன்னாள் வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதன் மூலம் அவர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அவமானப்படுத்துகிறது. இந்திய கிரிக்கெட் வளர்வதற்கு முன்னாள் வீரர்களின் சேவை அவசியம் தேவைப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


ஏற்கெனவே இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோருக்கு நோட்டீஸ் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com