சதம் விளாசினார் ரோகித் சர்மா - ரன் குவிப்பில் இந்தியா
60 பந்துகளில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 98 பந்துகளில் சதம் விளாசினார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்தப் போட்டியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக கேதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளார். அதேபோல், சாஹலுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் கே.எல்.ராகுல்க்கு இந்தத் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக கங்குலி தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். “இந்திய அணி நிறைய விஷயங்களை சிந்திக்க வேண்டியுள்ளது. லோகேஷ் ராகுல் வெளியே உட்கார வைக்கப்பட்டிருக்கக் கூடாது என நம்புகிறேன். மிடில் ஆர்டர் பிரச்னை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேபோல், மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்டினை நீக்கிவிட்டு கேதர் ஜாதவை சேர்த்தது குறித்தும் சிலர் விமர்சனம் செய்துள்ளது. இருப்பினும், மிடில் ஆர்டரில் கேதர் ஜாதவ் கடந்த காலங்களில் பொருப்புடன் விளையாடி வந்துள்ளார். அவருக்கு வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை எனவும் சிலர் கூறியுள்ளனர்.
இதனிடையே, டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய தவான் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த மூன்று போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் 16 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்துள்ளது. 60 பந்துகளில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 98 பந்துகளில் சதம் விளாசினார். அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 51 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 128 ரன்களுடனும், ராயுடு 70 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளதால் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் அடித்தால் தான் ஈடுகொடுக்க முடியும்.