“கோலி முக்கியமானவர்; தோனி சாதனை மன்னன்”- பிசிசிஐ தலைவர் கங்குலி..!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்று உள்ளார். இவர் பிசிசிஐயின் 39-ஆவது தலைவராவர். அத்துடன் பிசிசிஐ தலைமை பொறுப்பை ஏற்கும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பிறகு சவுரவ் கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “நாங்கள் கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இனிமேல் கவனிப்போம். கடந்த மூன்று ஆண்டுகளாக என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் இனிமேல், எங்களின் முழு பங்களிப்பையும் அளித்து பணியாற்றுவோம். உள்ளூர் போட்டிகளுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் தர உள்ளோம். இரட்டை பதவி ஆதாயம் தொடர்பான பிரச்னையையும் நாங்கள் ஆய்வு செய்வோம்.
நான் நாளை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பேச உள்ளேன். அவர் இந்திய அணியின் கேப்டன் என்பதால் அவர் மிகவும் முக்கியமானவர். அவர் தற்போது இந்திய அணியை நல்ல இடத்திற்கு உயர்த்தி உள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். தோனி இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். அவரின் சாதனைகளை பட்டியலிட்டால் அது நம்மை வியப்பில் ஆழ்த்தும். சாம்பியன் வீரர்கள் விரைவில் தங்களது ஆட்டத்தை முடித்து விட மாட்டார்கள். நான் பதவி இருக்கும் வரை அனைவரும் நன்றாக மதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.