சூதாட்டத்தில் சென்னை வீரர்கள்? ஸ்ரீசாந்த் புது குண்டு!
சூதாட்டத்தில் ஈடுபட்ட சில வீரர்கள் இன்னும் விளையாடும் போது எனக்கு மட்டும் ஆயுள் தடையா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதை நீக்கக்கோரி ஸ்ரீசாந்த், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரித்த உயர்நீதிமன்றம் வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கேரள உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் முன்பு அப்பீல் செய்தது. விசாரித்த தலைமை டிவிசன் பெஞ்ச், ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தடை தொடரும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் சேனல் ஒன்றுக்கு ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில், 'சூதாட்ட புகார் பட்டியலில் என்னுடன் 13 பேர் இருந்தார்கள். இதில் எனக்கு மட்டும் ஆயுள் தடை விதித்துவிட்டு மற்ற வீரர்களை விளையாட அனுமதித்திருக்கிறார்கள். ஐபிஎல் மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் கூட அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் பெயர் எனக்குத் தெரியாது. சூதாட்டப்புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தடை விதித்தார்கள். 2 ஆண்டு தடை முடிந்து இப்போது மீண்டும் விளையாட ரெடியாகி விட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கூட சிலர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களில் சிலர் தற்போது இந்திய அணியில் விளையாடுகிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஏன் ஆயுள் தடை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்..