“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை

“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை
“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை

இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் தீபக் சாஹர் சிறப்பாக செயல்பட்டார். இவர் 7 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். அத்துடன் இவர் இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்நிலையில் தீபக் சாஹர் கடந்த வந்த கிரிக்கெட் பாதை குறித்து பார்ப்போம்.

2008ஆம் ஆண்டு தீபக் சாஹர் தனது பதினேட்டு வயதில் ராஜஸ்தான் ரஞ்சி அணிக்காக விளையாட முற்பட்டார். அப்போது ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் இருந்தார். இவர் தீபக் சாஹர் சர்வதேச கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு தகுதியானவர் இல்லை எனக் கூறி ராஜஸ்தான் ராஞ்சி அணிக்கு தேர்வு செய்யவில்லை. கிரேக் சாப்பலின் இந்த வார்த்தைகள் தீபக் சாஹரை மிகவும் பாதித்தது. 

இதனைத் தொடர்ந்து தீவிரமாக தனது உடற்தகுதி மற்றும் வேகப்பந்து வீச்சு ஆகியவற்றில் தீபக் சாஹர் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இவரின் தீவிர உழைப்பால் 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் தீபக் சாஹர் இடம்பிடித்தார். ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் இவர் 8 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதற்கு பிறகு அவர் ராஜஸ்தான் ரஞ்சி அணியில் முக்கிய வீரராக உருவெடுத்தார். 

இதன்பின்னர் சையத் முஸ்தாக் அலி டி20 போட்டியில் இவர் சிறப்பாக விளையாடிதால் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு தீபக் சாஹர் 10 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் இவர் விளையாடியதால் இவருக்கு தோனியின் ஆலோசனை கிடைத்தது. அதேபோல இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் சாஹர் 22 விக்கெட்களை வீழ்த்தி முக்கிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். 

இந்தாண்டு இவர் சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசினாலும் ஒரு போட்டியின் போது இவரை தோனி திட்டுவது போல வீடியோ வெளியானது. இதுகுறித்து தீபக் சாஹர், “ஒரு கேப்டனாக தோனி என் மீது அப்போது கோபப்பட்டார். ஏனென்றால் எதிரணி வெற்றிப் பெற 39 ரன்கள் தேவைப்பட்டப் போது நான் பந்துவீசினேன். அந்த சமயத்தில் நான் இரண்டு பீமர் (நோ) பந்துகளை வீசினேன். அந்த சமயத்தில் பந்து மற்றும் ஆடுகளம் சற்று ஈரப்பதமாக இருந்ததால் நான் பந்துவீசிய விதத்தை பார்த்து அவர் கோபப்பட்டார்” எனத் தெரிவித்தார். 

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீசியதால் இவருக்கு இந்திய டி20 அணியின் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்திய அணியிலும் இவர் சிறப்பாக பந்துவீசி வருவதால் அடுத்து ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகமாகியுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com