ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் ஏமாற்றம், கவாஜா அபார சதம்
ஆஷஸ் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கவாஜா அபாரமாக ஆடி சதமடித்தார். இந்தப் போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் ஸ்மித், 83 ரன்னில் அவுட் ஆனார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 346 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 83 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. கவாஜா 91 ரன்னுடனும் கேப்டன் ஸ்மித் 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 26 ரன்னை நேற்று எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்தார். தனது 111 வது இன்னிங்சில் ஸ்டீவன் சுமித் 6,000 ரன்கள் இலக்கை எட்டினார்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய கவாஜா சதமடித்தார். இந்தப் போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், 83 ரன்னில் அவுட் ஆனார். தேநீர் இடைவேளையின் போது, அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் எடுத்துள்ளது. கவாஜா 166 ரன்களுடனும் மார்ஷ் 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.