தகுதிச் சுற்றில் நடந்த அதிரடி திருப்பங்கள்.! எந்த அணிகள் எல்லாம் சூப்பர் 12ல்? #பார்வை

தகுதிச் சுற்றில் நடந்த அதிரடி திருப்பங்கள்.! எந்த அணிகள் எல்லாம் சூப்பர் 12ல்? #பார்வை
தகுதிச் சுற்றில் நடந்த அதிரடி திருப்பங்கள்.! எந்த அணிகள் எல்லாம் சூப்பர் 12ல்? #பார்வை

பரபரப்பிற்கும், சுவாரசியத்திற்கும் பஞ்சம் இல்லாத அளவில் டி20 உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜ் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்பார்க்காதவிதமாக தீப்பற்றிய ஆட்டங்களும், பெரிய அணிகளுக்கு சிறிய அணிகள் சளைக்காமல் அதிர்ச்சியளித்த போட்டிகளும் டி20 உலகக் கோப்பையை விறுவிறுப்பிற்குள் தள்ளியிருக்கிறது. தகுதி சுற்றில் சிறப்பாக விளையாடிய இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து முதலிய 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, நமீபியா, யுஏஇ அணிகள் தகுதிச் சுற்றில் கூட தேராமல் தொடரை விட்டே வெளியேறி உள்ளன.

தகுதி சுற்று போட்டிகளில் விறுவிறுப்பிற்கு குறைவில்லாத வகையில் பல முக்கிய போட்டிகள் அமைந்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளின. முக்கிய போட்டிகளின் முடிவுகள் இறுதிவரை சென்று யார் வெற்றிபெறுவார்? யார் தோல்வியடைவார்.? என்ற முடிவே இல்லாமல் கடைசிவரை சுவாரசியத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது.

அந்த வகையில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியளித்து சிறிய அணிகளை கொண்டாட்டத்தில் ஆழ்ந்த மூன்று போட்டிகள்,

1. இலங்கை VS நமீபியா

குரூப் ஸ்டேஜ் எனப்படும் சூப்பர் 12 அணிகளில் இடம்பெறுவதற்கான தகுதி சுற்று போட்டிகள் 8 அணிகளுக்கிடையே அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி சிறப்பாக விளையாடி 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்களை சுலபமாக அடித்து இலங்கை அணி வென்று விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதற்கு முன்னர் தான் இந்தியா, பாகிஸ்தான் முதலிய இரண்டு ஜாம்பவான் அணிகளை ஆசியக் கோப்பையில் தொடர்ச்சியாக தோற்கடித்து கோப்பையை வென்றிருந்தது இலங்கை அணி. இந் நிலையில் எத்தனை ஓவர்களில் இந்த போட்டியை இலங்கை முடிக்கும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் இலங்கை அணிக்கு அதிர்ச்சியளிக்க காத்திருந்தது நமீபியா அணி. அபாரமாக பந்துவீசிய நமீபியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 10 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது இலங்கை. அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் சொர்ப்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற 21 ரன்னுக்கு தொடர்ச்சியாக 2ஆவது, 3ஆவது விக்கெட்டுகள் என இழந்து தடுமாறியது.

ஆடுகளத்தின் தன்மையை கணிக்காமல் ஆடியதால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடாமல், 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு சுருண்டது. 55 ரன்களுக்கு அபார வெற்றி பெற்ற நமீபியா அணி 2 நாட்களுக்கு இலங்கை அணியின் தூக்கத்தை கெடுத்தது.

2. இலங்கை VS யுஏஇ

முதல் போட்டியின் தோல்வியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இலங்கை அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. நல்ல இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கபட்ட இடத்தில் பந்து வீச வந்தார் சுழற்பந்துவீச்சாளர் மெய்யப்பன். ராஜபக்சே, அசலங்கா மற்றும் கேப்டன் ஷனகா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 140க்குள்ளேயே சுருண்டுவிடும் என்று நினைத்த இலங்கையை இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய நிஷாங்காவின் 74 ரன்கள் காப்பாற்றியது.

பின்னர் களமிறங்கிய யுஏஇ அணியை அபார பந்துவீச்சால் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி நல்ல வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி.

3. வெஸ்ட் இண்டிஸ் VS ஸ்காட்லாந்து

இலங்கை தோல்வி அடைந்ததை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் போட்டியை ஸ்காட்லாந்து அணியுடன் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி ஓபனிங் பேட்டர் மன்சேவின் அதிரடி ஆட்டத்தால் 160 ரன்கள் குவித்தது. 161 ரன்கள் பெற்றால் வெற்றி என்று களமிறங்கிய விண்டிஸ் அணிக்கு ஷாக் கொடுத்தனர் ஸ்காட்லாந்து பவுலர்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் 5 பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற அணியின் வெற்றிக்கு இறுதிவரை நின்று போராடினார் ஜேசன் ஹோல்டர். 38 ரன்கள் அடித்த அவர் 19ஆவது ஓவரில் கடைசி விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது வெஸ்ட் இண்டீஸ்.

4. வெஸ்ட் இண்டீஸ் VS அயர்லாந்து

கட்டாயம் வெற்றி பெற்றால்தான் அடுத்த சூப்பர் 12 சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. நல்ல தொடக்கத்தை கொடுத்த சார்லஸ் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து லெவிஸ், நிக்கோலஸ் பூரன், பவல் என அடுத்தடுத்து வெளியேற ப்ராண்டன் கிங் மற்றும் ஓடியன் ஸ்மித் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இருவரின் போராட்டத்திற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 146 ரன்களே எடுக்க முடிந்தது.

பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 1 விக்கெட்டை மட்டுமே விட்டுக்கொடுத்த அயர்லாந்து அணி 17.3 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 தகுதி சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறி அதிர்ச்சியளித்தது.

குரூப் A அணியில் இருந்து இலங்கை, நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 க்கு முன்னேறி குரூப் 1 மற்றும் குரூப் 2 அணிகளுடன் மோதுகின்றன. குரூப் B அணியில் இருந்து ஜிம்பாபே, அயர்லாந்து அணிகள் முன்னேறி குரூப் 2 மற்றும் குரூப் 1 அணிகளுடன் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com