அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்லோனே ஸ்டீஃபன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் - ஸ்டீஃபன்ஸ் மோதினர். இருவரும் அமெரிக்க வீராங்கனைகள் என்றதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்லோனேவின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. வெறும் 61 நிமிடங்கள் மட்டுமே நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்லோனே 6-3, 6 -0 என்ற நேர் செட் கணக்கில் மேடிசனைத் தோற்கடித்தார்.
தரவரிசைப் பட்டியலில் 83ஆவது இடத்தில் உள்ள ஸ்லோனே ஸ்டீஃபன்ஸ், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு முன்னர் கடந்த 2009ஆம் ஆண்டு, தரவரிசையில் பின்தங்கிய நிலையிலிருந்த பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளிஸ்ட்ர்ஸ் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

