‘கன்னத்தில் 4 முறை ஓங்கி அறைந்த ஐபிஎல் அணி உரிமையாளர்’-ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு

‘கன்னத்தில் 4 முறை ஓங்கி அறைந்த ஐபிஎல் அணி உரிமையாளர்’-ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு
‘கன்னத்தில் 4 முறை ஓங்கி அறைந்த ஐபிஎல் அணி உரிமையாளர்’-ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாட முடியாமல் போனதால் அணி உரிமையாளர் தன்னை அறைந்ததாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராகவும், அதிரடி ஆட்டக்காரராகவும் வலம் வந்தவர் ராஸ் டெய்லர். கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின்னர் "Black & White" என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்ட ராஸ் டெய்லர், அதில் நியூசிலாந்து அணியில் தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தான் சந்தித்த நிறவெறி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில், “நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளை நிற மக்களுக்கானதாக உள்ளது. அணியில் நான் மட்டும் மாநிறமாக இருந்தேன். இதனால் பலமுறை ஓய்வு அறையில் நிறத்தை வைத்து சக வீரர்களே விமர்சித்துள்ளனர். மிகவும் கொடுமையானது” என அதில் கூறியிருந்தது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்படும் ஐபிஎல் போட்டியில், அணியின் உரிமையாளர் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக கூறி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார் ராஸ் டெய்லர். நியூசிலாந்தின் வலைத்தளமான stuff.co.nz-ல் ராஸ் டெய்லர் சுயசரிதை புத்தகத்தின் ஒரு அத்தியாயம் வெளியிடப்பட்டது. அதனை மேற்கோள்காட்டி அவர் தெரிவித்துள்ளதாவது, “ நீங்கள் விளையாடுவதற்காக பணத்தை பெறும்போது, உங்களை நிரூபிக்க ஆர்வமாக இருப்பீர்கள். மேலும் பணத்தை உங்களுக்காக செலவு செய்பவர் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்.

இது இயல்பான ஒன்றுதான். கடந்த காலங்களில் நான் சிறப்பாக விளையாடினால் அணிக்கு நம்பிக்கை இருக்கும். ஆனால் ஒரு வீரர் புதிதாக ஒரு அணிக்கு செல்லும்போது, அங்கு எல்லா சூழ்நிலைகளும் சாதகமாக இருக்காது. அதுவும், அவர் அங்கு சிறப்பாக செயல்படவில்லை என்றால், நிலைமை மோசமாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு 2011-ம் ஆண்டில் நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றபோது, மொகாலியில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நாங்கள் 195 ரன்கள் இலக்கை துரத்தியபோது, நான் டக் அவுட் ஆனேன். ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபுள்யூ ஆனேன்.

அந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்றோம். அதன்பிறகு அணி நிர்வாகிகள், வீரர்கள் அனைவரும் ஓட்டலின் உச்சியில் இருந்த பாருக்கு சென்றோம். ஷேன் வார்னேவும் வந்திருந்தார். அப்போது ராஜஸ்தான் அணி உரிமையாளர் ஒருவர் என்னிடம், ‘ராஸ் நீ டக் அவுட் ஆவதற்கு உனக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கவில்லை’ எனக் கூறி கன்னத்தில் 3-4 முறை அறைந்தார். அது கடுமையான அறை இல்லைதான். அதே சமயத்தில் அது வெறும் விளையாட்டு நடிப்பு அல்ல. அப்போது இதனை நான் பெரிதுப்படுத்த விரும்பவில்லை. தொழில்முறை விளையாட்டுகளில் இதுபோன்று நடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

ஆனால் இதே போன்ற நிலைமை தான் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் நடந்துக்கொண்டிருக்கிறது என்பது தான் மனதிற்கு வலிக்கிறது. அதனை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது” என ராஸ் டெய்லர் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி அணிகளுக்காகவும் விளையாடியிருக்கிறார் ராஸ் டெய்லர். 2008-ம் ஆண்டில் ஆர்சிபி அணியில் இடம்பெற்ற இவர், 2011-ம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு இடம் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com