இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சாஹல் மற்றும் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதில் குல்தீப் மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 13 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடம் வகிப்பதால் ஏற்கெனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்டது. அதேசமயம் இலங்கை அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டம் இந்திய அணிக்கு அரை இறுதி போட்டிக்கு முன்பு ஒரு பயிற்சி ஆட்டம் போல் அமைந்துள்ளது.
அதேபோல இலங்கை அணியை பொருத்தவரை ஆறுதல் வெற்றியுடன் உலகக் கோப்பை பயணத்தை முடிக்கும் முனைப்பில் உள்ளது. அந்த அணியின் இளம் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக ஆடிவருகிறார். வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு உலகக் கோப்பையில் இது கடைசி போட்டி என்பதால், அவர் சாதிக்க முயற்சிப்பார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 158 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 90 போட்டிகளிலும், இலங்கை அணி 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 11 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது.