"முடிந்தால் மோதிப்பார் என சொல்கிறது ரோகித்தின் உடல்மொழி"-நியூசி. முன்னாள் வீரர் புகழாரம்

"முடிந்தால் மோதிப்பார் என சொல்கிறது ரோகித்தின் உடல்மொழி"-நியூசி. முன்னாள் வீரர் புகழாரம்
"முடிந்தால் மோதிப்பார் என சொல்கிறது ரோகித்தின் உடல்மொழி"-நியூசி. முன்னாள் வீரர் புகழாரம்

“கடினமான சூழ்நிலைகளில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார்” என்று பாராட்டியிருக்கிறார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டௌல்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, கடந்த 9ஆம் தேதி தொடங்கிய பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா காரணமாக இருந்தாலும் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (120), ஜடேஜா (70) மற்றும் அக்சர் படேல் (84) முக்கிய காரணமாக இருந்தனர். குறிப்பாக, இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 120 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டௌல், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சதம் குறித்த பாராட்டுகளை தெரிவித்ததோடு, கடினமான சூழ்நிலைகளில் இந்திய கேப்டன் சிறப்பாக செயல்படுகிறார் என்று புகழ்ந்து பேசினார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் கூறுகையில், ''ரோகித் சர்மா கடுமையாக போராடும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். எதிராளி வரும்போது எழுந்து நிற்கும் துணிச்சலான வீரர் அவர். 'முடிந்தால் மோதிப்பார்'  என்று அவரது உடல்மொழி சொல்கிறது. 

அவரது கேப்டன்சியும் கொஞ்சம் அவ்வாறே இருக்கிறது. நெருப்பை நெருப்பால் அணைக்கும் துணிகரம் அவரிடம் இருக்கிறது. ரோகித் சர்மா தனது இன்னிங்ஸிலும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். நெஞ்சுரத்துடனும் நம்பிக்கையுடனும் காணப்படுகிறார். இந்திய அணி எப்போதுமே ஜடேஜா மற்றும் அக்சாரை நம்பி மட்டுமே ஆடப்போகிறதா என்று தெரியவில்லை. குல்தீப் யாதவையும் ஆடும் லெவனில் எடுத்திருக்கலாம். ஆடும் லெவனில் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் இருந்திருக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com