ஷிகர் தவான், விராட் கோலி சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷுப்மன் கில்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில். 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ஆட்டமிழந்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷுப்மான் கில் படைத்தார். கில் அதிவேகமாக 1,000 ரன்களை 19 இன்னிங்சில் அடித்துள்ளார். இதற்கு முன் விராட் கோலியும், ஷிகர் தவானும் 24 இன்னிங்சில் 1,000 ரன்களை எட்டியிருந்தனர்.
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் இரட்டை சதம் விளாசியவர் என்ற சாதனையையும் ஷுப்மன் கில் படைத்துள்ளார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய 5-வது இந்தியராகி உள்ளார் அவர். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷுப்மன் கில் (208 ரன்கள்). இதற்கு முன்னர் சச்சின் 186, மேத்யூ ஹைடன் 181 ரன்களை நியூஸிலாந்துக்கு எதிராக விளாசியிருந்தனர்.
23 வயதான ஷுப்மன் கில், கடந்த 2019இல் நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக இதுவரை 18 ஒருநாள், 3 டி20 மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்கள் மற்றும் 5 அரை சதங்கள் அடித்துள்ளார் அவர். முன்னதாக, ஷுப்மன் கில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் விளாசியதோடு, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இப்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் தொடக்க வீரருக்கான இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார் ஷுப்மன் கில்.