'ரோகித்துக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன்கள் இவர்கள்தான்' - முன்னாள் வீரர் கணிப்பு

'ரோகித்துக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன்கள் இவர்கள்தான்' - முன்னாள் வீரர் கணிப்பு
'ரோகித்துக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன்கள் இவர்கள்தான்' - முன்னாள் வீரர் கணிப்பு

''மூன்று ஃபார்மேட்டுக்கும் ஒரே கேப்டன் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது'' என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று விதமான தொடருக்கான முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இருப்பினும் சமீபகாலமாக டி20 அணியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு வருகிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது பிசிசிஐ.

இதன்மூலம் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றாலும் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு பிறகு கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. தற்போது 35 வயதாகும் கேப்டன் ரோகித் சர்மா வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித்துக்கு அடுத்து இந்திய ஆடவர் அணியின் கேப்டன் யார் என்ற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், இந்திய அணியில் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் ஷுப்மான் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ''மூன்று ஃபார்மேட்டுக்கும் ஒரே கேப்டன் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரைக்கும்தான் ரோகித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார். அதில் சந்தேகமில்லை.

டி20 அணி முழுவதுமாக ஹர்திக் பாண்டியாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. 2024 டி20 உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியாவே இந்திய அணியின் கேப்டனாக இருப்பார். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனுக்கான போட்டியில் ஷுப்மான் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் இருப்பார்கள். இவர்கள் இருவர்தான் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு என்னுடைய வேட்பாளர்கள்'' என்று கூறியிருக்கிறார்.

இதைத்தொடந்து ரிஷப் பண்ட் மற்றும் ஷுப்மான் கில் மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் அடிபட்டு ரிஷப் பண்ட் ஓய்வெடுத்து வரும் நிலையில் அவர் அடுத்து எப்போது மைதானத்துக்குள் வருவார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com