எதிர்கால திட்டம் என்ன? - மனம் திறந்த ஸ்ரேயஸ் ஐயர்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்திருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது திட்டம் குறித்து மணம் திறந்துள்ளார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி நடுகள ஆட்டக்காரர் பிரச்னைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியில் நடுகள வரிசையில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தனது திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை போன்ற இளம் வீரருக்கு இந்திய அணியில் இடம் பிடிப்பது அவசியமான ஒன்று. அதிலும் இந்த இடத்தை தக்கவைப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதற்கு தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு உதவியாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை நான்காவது இடத்தில் விளையாடுவது முக்கியமில்லை. நான் எந்த இடத்திலும் விளையாடும் வீரராக தான் இருக்க ஆசைப்படுகிறேன். எந்தச் சூழ்நிலையில் களம் இறங்கினாலும் அதற்கு ஏற்ப விளையாடும் திறனை வெளிக்காட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன். முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. ஆகவே அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியில் என்னுடைய இடத்தை தக்கவைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.