'தோனியை போன்று வழிநடத்துகிறார் ரிஷப் பண்ட்' - குல்தீப் யாதவ் புகழாரம்

'தோனியை போன்று வழிநடத்துகிறார் ரிஷப் பண்ட்' - குல்தீப் யாதவ் புகழாரம்
'தோனியை போன்று வழிநடத்துகிறார் ரிஷப் பண்ட்' - குல்தீப் யாதவ் புகழாரம்
Published on

இதுவரை நடந்த 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் குல்தீப் யாதவ்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த சீசனில் விக்கெட் வேட்டை நிகழ்த்தி வருகிறார்.  இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், தோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், ''சுழற்பந்து வீச்சாளர்களின் வெற்றியில் விக்கெட் கீப்பர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தவகையில் இம்முறை எனது எழுச்சிக்கு டெல்லி அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்தான் காரணம். உரிய நேரத்தில் நல்ல ஆலோசனை வழங்குவார். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. ஸ்டம்புக்கு  பின்னால் நின்று தேவையான ஆலோசனை வழங்குகிறார். களத்தில் மிகவும் 'கூலாக' செயல்படுகிறார். எம்எஸ் தோனியை போன்று சரியான திசையில் அவர் வழிநடத்துகிறார்.

துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் எனக்கு  உதவினார். இருவரும் பயிற்சியின்போது வெளிப்படையாக பேசினோம். மனதளவில் போட்டிக்கு தயாராவது குறித்து வாட்சன் எனக்கு அறிவுரை வழங்கினார். தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் முதல்முறையாக பேசிய போது, 'பவுலிங் நன்றாக உள்ளது; 14 லீக் போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும்' என நம்பிக்கை ஊட்டினார். இது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்தது. டெல்லி அணி நிர்வாகமும் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையை வீரர்களுக்கு அளித்துள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியிலும் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறேன்'' என்று கூறினார்.  

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவ் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். மெகா ஏலத்திற்கு முன்பு கொல்கத்தா அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட குல்தீப் யாதவை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 கோடிக்கு (அடிப்படை விலை) வாங்கியது. கடந்த இரண்டு வருடங்களாக சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருந்த குல்தீப் யாதவுக்கு இந்த முறை டெல்லி அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அசத்தி வருகிறார்.  

இதையும் படிக்கலாம்: மங்கி வரும் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com