டி-10 கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் ஆடலாமா?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் டி-10 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்கள் இணைந்து ஆடலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.
டி-20 கிரிக்கெட் லீக் போட்டியை அடுத்து டி-10 கிரிக்கெட் போட்டி பிரபலமாகி வருகிறது. இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான போட்டி அபுதாபியில் நவம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து விளையாட உள்ளதாகத் தெரிகிறது. மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உட்பட பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் கூட பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. இந்திய அணி, தனிப்பட்ட தொடர்களை பாகிஸ்தான் அணியுடன் நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் ஜாவித் மியான் தத்தும் ஷாகித் அப்ரிதியும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் டி-20 தொடரில் ஓர் அணிக்கு கேப்டனாக ஷாகித் அப்ரிதி இருக்கிறார். இதனால் இந்த தொடரில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து ஆட வேண்டுமா என்ற கேள்வி எழுப்படுகிறது.
இதுபற்றி, இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கானிடம் கேட்டபோது, ‘’ இந்த தொடரில் விளையாடுவதில் எந்த பிரச்னையும் இருப்பதாக நினைக்கவில்லை. இதில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவில்லை. தனிப்பட்ட வீரர்கள்தான் பங்குபெறுகிறார்கள். அதனால் பிரச்னையில்லை’’ என்றார்.
இந்த தொடரில் இந்தியாவில் இருந்து ஜாகிர்கான் தவிர, யுவராஜ் சிங், யூசுப் பதான், இர்பான் பதான் உட்பட சில வீரர்கள் விளையாட இருப்பதாகக் கூறப்படுகிறது.