ஷிவம் துபே 95*, உத்தப்பா 88.. மிரட்டிய சென்னை பேட்ஸ்மேன்கள்.. மிரண்டுபோன ஆர்சிபி பவுலர்கள்

ஷிவம் துபே 95*, உத்தப்பா 88.. மிரட்டிய சென்னை பேட்ஸ்மேன்கள்.. மிரண்டுபோன ஆர்சிபி பவுலர்கள்
ஷிவம் துபே 95*, உத்தப்பா 88.. மிரட்டிய சென்னை பேட்ஸ்மேன்கள்.. மிரண்டுபோன ஆர்சிபி பவுலர்கள்

ஷிவம் துபே, உத்தப்பாவின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 216 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றிகளை குவித்து வலுவான நிலையில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப் பிளசிஸ் எல்லா கேப்டன்களைப் போலவே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு இந்த முறையும் தொடக்கம் சரியாக அமையவில்லை. கடந்த நான்கு போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெயிக்வாட் இந்தப் போட்டியிலும் 16 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி எதிர்பாராத விதமாக 3 ரன்கள் எடுத்த நிலையிலேயே ரன் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 36 ரன்களுக்குள் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ராபின் உத்தப்பாவுடன் இணைந்து ஷிபம் துபே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனால், எப்படியும் இந்த முறையும் சென்னை அணி அவ்வளவுதான் என்று ரசிகர்கள் கவலையில் இருக்கையில், ஷிபம் துபேவும், உத்தப்பாவும் வாட வேடிக்கை காட்டத் தொடங்கினர். இருவரும் அடிக்கும் பந்துகளும் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்ற வண்ணம் இருந்தன. முதல் 10 ஓவர்கள் விளையாடிய சென்னை அணியா இது என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு பேட்டிங் இருந்தது.

உத்தப்பா 32 பந்துகளிலும், ஷிவம் துபே 30 பந்துகளிலும் அரைசதம் விளசினர். அதன் பிறகும் இன்னும் உக்கிரமாக தங்களது அதிரடியை இருவரும் தொடர்ந்தனர். உத்தப்பா சிக்ஸர் மழையாக பொழிந்தார். நானும் சளைத்தவன் இல்லை என்று ஷிவம் துபேவும் சிக்ஸர்களாக பறக்கவிட்டார். 16.2 ஓவர்களில் சென்னை அணி 150 ரன்களை எட்டியது. 18.3 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. 19வது ஓவரின் ஐந்தவது பந்தில் ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். 50 பந்துகளை சந்தித்த அவர் 9 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே வந்த வேகத்தில் முதல் பந்திலேயே ஜடேஜாவும் அவுட் ஆனார்.

இறுதி ஓவரிலும் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் துபே. கடைசி பந்து இருக்கையில் அவர் 94 ரன்கள் எடுத்திருந்தார். சிக்ஸர் விளாசி சதத்தை நிறைவு செய்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 95 ரன்களுடன் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்துள்ளது. முதல் 10 ஓவர்களில் வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே, கடைசி 10 ஓவர்களில் 155 ரன்கள் குவித்தது.

217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் பெங்களூரு அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டூப் பிளசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஒரு ரன்னில் ஏமாற்ற, சிறிது நேரம் வானவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே நிறைய ஸ்பின்னர்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com