மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சாதனை - சுரேஷ் ரெய்னாவை ஓரங்கட்டிய தவான்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சாதனை - சுரேஷ் ரெய்னாவை ஓரங்கட்டிய தவான்
மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சாதனை - சுரேஷ் ரெய்னாவை ஓரங்கட்டிய தவான்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டிகளில், குறைந்த இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்து, சுரேஷ் ரெய்னாவின் சாதனையை , ஷிகார் தவான் முறியடித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும், 15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியில், இதுவரை 23 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில், பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டிகளில், 3 போட்டிகளில் வெற்றிபெற்றும், 2 போட்டிகளில் தோல்வியடைந்தும், 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப் அணியால், 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஷிகார் தவான் நல்ல பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில், ஷிகார் தவான் பல சாதனைகளை படைத்துள்ளார். நேற்றிரவு புனே எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த 23-வது லீக் போட்டியில், 50 பந்துகளில் 70 ரன்கள் அடித்து, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த ரன்களை எடுத்ததன் மூலம், மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவை ஓரங்கட்டியுள்ளார் ஷிகார் தவான்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா 36 இன்னிங்சில் 824 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தநிலையில், ஷிகார் தவான் 27 இன்னிங்சிலேயே 871 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார். இதையடுத்து, 31 இன்னிங்சில், 827 ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வீரரான விராட் கோலி, 3-ம் இடத்தில் உள்ளார்.

1. ஷிகர் தவான் : 871 ரன்கள் (27 இன்னிங்ஸ்)
2. சுரேஷ் ரெய்னா : 850 ரன்கள் (36 இன்னிங்ஸ்)
3. விராட் கோலி : 827 ரன்கள் (31 இன்னிங்ஸ்)

இதேபோல், இந்தப் போட்டியில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட தவான், ஐபிஎல் வரலாற்றில், 197 இன்னிங்சில் 673 பவுண்டரிகள் மற்றும் 130 சிக்ஸர்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளார்.

1. ஷிகர் தவான் : 803* (சிக்ஸர் + பவுண்டரிகள்)
2. விராட் கோலி : 768
3. கிறிஸ் கெயில் : 762

இந்தப்போட்டியில் அரைசதம் அடித்த அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். ஷிகார் தவான் விராட் கோலி ஆகிய இருவருமே இதுவரை 47 அரை சதங்கள் அடித்துள்ளனர்.

தற்போது 5,981 ரன்கள் எடுத்துள்ள ஷிகார் தவான் இன்னும் 19 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் வரலாற்றில், 6000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அடைவார். இதற்கு முன்னதாக, 204 இன்னிங்சில் 6390 ரன்கள் எடுத்து விராட் கோலியே முன்னணி வகிக்கிறார். அந்த சாதனையை விரைவில், ஷிகார் தவான் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com