“என்னை இன்னும் குழந்தையாகவே பார்க்கின்றனர்” - பெற்றோர் குறித்து தவான்
தன்னை இன்னும் ஒரு குழந்தையாகவே தனது பெற்றோர் பார்ப்பதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
13வது ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) தொடங்குகிறது. இந்தத் தொடர் அபுதாபி, ஷர்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டி செவ்வாய் கிழமையை அன்று நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான பயிற்சியை யுஏஇ-யில் மேற்கொள்ள கடந்த வியாழக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் புறப்பட்டுச் சென்றன. இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யுஏஇ சென்றது. இந்நிலையில் நாளை டெல்லி கேபிடல்ஸ் அணி யுஏஇ புறப்படுகிறது. இந்த பயணத்தை முன்னிட்டு டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தனது பெற்றோரிடம் வாழ்த்துகளை பெற நேரில் சென்றுள்ளார்.
அப்போது ஷிகர் தவானை கட்டி அணைத்துக்கொண்ட பெற்றோர், அவரை வாழ்த்தி அனுப்பியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள தவான், “நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது முன்பு பெற்றோரிடம் வாழ்த்து பெற சென்றிருந்தேன். அவர்கள் இன்னும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கின்றனர். பெற்றோர்களிடம் கிடைக்கும் அன்புக்கு இணையான அன்பு வேறு எங்கும் கிடைக்காது. நான் எப்போது அதை மதிப்பவன்” என்று கூறியுள்ளார்.