"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் ?

"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் ?
"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் ?

ஐபிஎல் டி20யின் இன்றையப் போட்டியில் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. முதல் வெற்றியை அபுதாபியில் பெற்ற நம்பிக்கையுடன் சிஎஸ்கேவும், புகழ்பெற்ற ஷார்ஜா மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் ராஜஸ்தான் ராயல்ஸூம் களம் காண்கிறது.

இந்தாண்டு அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனால் கிரிக்கெட் கணிப்பாளர்கள் பலரும் போட்டியின் போக்கு எப்படி இருக்கும் என்றும், மைதானங்களில் பங்கு என்ன என்றும் கணித்து வருகின்றனர். ஏனென்றால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதில் மைதானத்தின் பங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

உதாரணத்திற்கு சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபடும் ஒரு மைதானத்தில் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு களமிறங்கினால் அந்த அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவுதான். அத்துடன் முதல் பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு மைதானத்தில், டாஸ் வென்ற ஒரு அணி 2வது பேட்டிங்கை தேர்வு செய்தால், பின்னர் எதிரணியின் ரன்களை சேஸிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டு விடும். இதனால் எதிரணிக்கு ஏற்றாற்போல அல்லாமல், மைதானத்திற்கு ஏற்றாற்போலவும் ஒரு அணி திட்டமிட்டு ஆட வேண்டியது அவசியமாகும்.

ஷார்ஜா ஆடுகளத்தை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் 8 போட்டிகளில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஷென்வாரி மொத்தம் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.இதேபோல முகமது நபி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் 12 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 150 முதல் 160 ரன்கள் எடுத்தாலே போதுமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மிக முக்கியமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் செய்வதே உத்தமம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்ச டி20 ஸ்கோரை ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்தது. இதனை ஜிம்பாப்வே அணிக்காக எதிராக எடுத்தது. அதேபோல அதிகபட்ச சேஸிங் 140 ரன்களையும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் எடுத்துள்ளது. இதேபோல 2014 ஐபிஎல் தொடரின்போது கிளன் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணிக்காக இரண்டு மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வாங்கியுள்ளார். அதேபோல சிஎஸ்கே அணி ஷார்ஜாவில் நடைபெற்ற எந்தப் போட்டியிலும் தோற்கவில்லை.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மழைக்கு வாய்ப்பில்லை, இன்றைய வானிலையின்படி வெப்பம் 39 டிகிரி செல்சியசாக பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com