ஐபிஎல் 2020 : சென்னைக்காக விளையாட ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்ட வாட்சன்
மற்றொரு உற்சாகமான ஐபிஎல் தொடரை சென்னை அணிக்காக விளையாட சென்றுகொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் காலில் ரத்தம் வடிய பேட்டிங் செய்து சென்னை வெற்றி பெற வைக்க போராடிய வாட்சனை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட வாட்சன் யுஏஇ (ஐக்கிய அரசு அமீரகம்) புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மற்றொரு உற்சாகமான ஐபிஎல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட சென்றுகொண்டிருக்கிறேன். தற்போதை நாட்களில் இந்த உலகம் ரொம்பவும் வித்தியாசமாக உள்ளது. ஆனால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன்பின்னர் அனைவரும் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெறவுள்ளது. இதற்காக பயிற்சி எடுக்க ஒவ்வொரு அணி வீரர்களாக யுஏஇ சென்றுகொண்டிருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நாளை யுஏஇ புறப்படுகின்றனர்.

