தோனி அன்று வைத்த நம்பிக்கை : இன்றும் காப்பாற்றும் வாட்ஸன்..!

தோனி அன்று வைத்த நம்பிக்கை : இன்றும் காப்பாற்றும் வாட்ஸன்..!
தோனி அன்று வைத்த நம்பிக்கை : இன்றும் காப்பாற்றும் வாட்ஸன்..!

3 போட்டிகளின் தோல்விக்குப் பின்னர் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றி கிரிக்கெட் வட்டாரங்களில் பட்டைய கிளப்பியிருக்கிறது. தொடர்ந்து 4 போட்டிகளிலும் வந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்த வாட்ஸன், நேற்றைய போட்டியில் வரிந்துகட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இது மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் எதிர்பாராத ஒரு அதிரடியாக இருந்திருக்கலாம், ஆனால் சென்னை கேப்டன் தோனிக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். ஏனென்றால் 4 போட்டிகளில் அவுட் ஆகிய வாட்ஸனை எத்தனை தரப்புகளிலிருந்து அழுத்தங்கள் வந்தபோதும் அணியிலிருந்து நீக்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடக்க வீரராக களமிறக்கினார் தோனி.

இந்த நம்பிக்கை தோனி இப்போது வைத்தது அல்ல. 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்காக வாட்ஸன் ஏலத்தில் எடுக்கப்பட்டபோதே அந்த நம்பிக்கையை தோனி வைத்துவிட்டார். அந்த சமயம் வாட்ஸனின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கசப்பான காலமாக இருந்தது.  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 59 டெஸ்ட் போட்டிகள், 190 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளை ஆஸ்திரேலியாவிற்காக விளையாடி உலக ஆல்ரவுண்டர்களில் முக்கிய இடம் பிடித்தவர் வாட்ஸன்.

2002ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்றபோது, அவர் கட்டமைத்த அணியில் வாய்ப்பை பெற்றவர் வாட்ஸன். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிரிக்கெட் உலகில் நாயகனாக வலம் வரத்தொடங்கிய வாட்ஸன், 2009ஆம் சாம்பியன்ஸ் திரோபி தொடரில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஒற்றை மனிதனாக இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 136 (122) ரன்களையும் வாட்ஸன் விளாசியிருந்தார். மேலும் இறுதிப்போட்டியில் டிம் பெயின், ரிக்கி பாண்டிங், மைக்கெல் ஹஸ்ஸி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோது, இறுதிவரை அவுட் ஆகாமல் சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இதற்கிடையே தான் வாட்ஸனின் ஐபிஎல் பயணம் 2008ல் ஆரம்பித்திருந்தது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வாட்ஸன், முதல் தொடரில் ரன்களை வாரிக்குவித்தது மட்டுமின்றி, அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். வாட்ஸனின் வலிமையால் அந்த முறை ஐபிஎல் சாம்பியன்ஸ் பட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிருந்தது. 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை காயம் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கான போட்டிகள் ஆகிய காரணங்களால் வாட்ஸன் பெரிதும் ஆடவில்லை.

 பின்னர் 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆடத்தொடங்கினார். 2013ஆம் ஆண்டுப் பின்னர் ஐபிஎல் தொடருக்காக முழு வீச்சில் ஆடத்தொடங்கினார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த வாட்ஸன் 61 பந்துகளில் 101 ரன்களை விளாசியிருந்தார். 2014ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற வாட்ஸன், தனது பாணியிலான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தினார். 14 லீக் போட்டிகளில் 7 போட்டிகளை வென்ற ராஜஸ்தான் அணி, அந்தத் தொடரில் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. பின்னர் 2015ஆம் ஆண்டில் மீண்டும் ஐபிஎல் தொடரில் ரன்களை குவிக்கத் தொடங்கிய வாட்ஸன், மீண்டு காயத்தினால் அவதிப்பட்டார். இதற்கிடையே அவர் கொல்காத்தாவிற்கு எதிராக ஒரு சதத்தை அடித்திருந்தார்.

2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சூதாட்டத்தின் காரணமாக தடை விதிக்கப்பட்டதால், அந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாட்ஸன் 9.5 கோடியில் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் வாட்ஸனின் திறமையை சரியாக பயன்படுத்ததாக பெங்களூரு அணி அவரை மிடில் ஆர்டரில் களமிறக்கி வீணடித்தது. இருப்பினும் அந்த தொடரில் வாட்ஸன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பவுலிங் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து வாட்ஸனை அணியிலிருந்து பெங்களூருவிடுவிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க மறுத்துவிட்டது.

அந்தக்காலம் வாட்ஸனின் கிரிக்கெட் வரலாற்றில் கசப்பான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது வாட்ஸன் மீது நம்பிக்கை வைத்து அவரை ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2018ஆம் ஆண்டு சென்னைக்காக வாட்ஸன் தனது ஆட்டத்தை தொடங்க, அவரை முழுவதுமாக நம்பி தொடக்க வீரராக களமிறக்கினார் தோனி. மற்ற அணிகள் ஒதுக்கியபோது தன் மீது தோனி வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசத்தை காட்ட வேண்டும் என அதிரடியை வெளிப்படுத்திய வாட்ஸன் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 555 ரன்களை விளாசியிருந்தார். இதுவே ஐபிஎல் தொடரில் வாட்ஸனின் அதிகபட்ச ரன் குவிப்பாகும். அத்துடன் அந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 117 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சென்னைக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் வாட்ஸன் சிறப்பாக ஆடாத போதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தோனி களமிறக்கியிருந்தார். அதற்கெல்லாம் சேர்த்து இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக காலில் ரத்தம் வடிய பேட்டிங் செய்த வாட்ஸன், 59 பந்துகளில் 80 ரன்களை சிதறடித்திருந்தார். தன்மீது தோனி வைத்த நம்பிக்கைக்காக சென்னையில் சேர்ந்தபோது ரன்களை அடிக்க ஆரம்பித்த வாட்ஸன், இன்று வரையிலும் அதை மறக்காமல் இருக்கிறார் என்பதற்கு நேற்று அவர் அடித்த அதிரடியே சாட்சியாக இருக்கிறது. 39 வயது நிரம்பினாலும் இன்றும் வாட்டசாட்டமாக இருக்கும் வாட்ஸனின் அதிரடியைக் காணும்போது எந்த ஒரு பவுலருக்கும் உள்ளார்ந்த அச்சம் ஏற்படும் என்பதே உண்மையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com