அடுத்தடுத்து ஒரே நாளில் உயிரிழந்த 2 ஆஸி. ஜாம்பவான்கள் - வைரலாகும் வார்னேவின் கடைசிப் பதிவு
ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணமடைந்த நிலையில், ஷேன் வார்னேவும் இன்று உயிரிழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ராட் மார்ஷ், கடந்த 1970 முதல் 1984 வரை 96 டெஸ்டில் விளையாடி 355 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 74 வயதான ராட் மார்ஷ் கடந்த வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அடிலெய்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராட் மார்ஷ் மறைவையொட்டி அவருக்கு, ஆஸ்திரேலிய சுழற்பந்து சக்கரவர்த்தி ஷேன் வார்னே உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பதிந்திருந்தார். அதில், “ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி வருத்தமாக உள்ளது. நமது நாட்டின் தலைச்சிறந்த விளையாட்டு வீரரான அவர், இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார். ராட் கிரிக்கெட்டில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தவர்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் மீதும் அக்கறையாக இருந்தார். ரோட் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு. RIP” எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தாய்லாந்தில் இன்று மாலை ஷேன் வார்னே மாராடைப்பால் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் இரண்டு ஜாம்பவான்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது பிரபலங்கள், ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.