காயங்களையும் சர்ச்சைகளையும் கடந்து சாதித்த முகமது ஷமி !

காயங்களையும் சர்ச்சைகளையும் கடந்து சாதித்த முகமது ஷமி !
காயங்களையும் சர்ச்சைகளையும் கடந்து சாதித்த முகமது ஷமி !

இந்திய அணியின் மிக முக்கியமான வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி. அவர் இன்று நேப்பியரில் நடைப்பெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த விக்கெட் முகமது ஷமியின் ஒருநாள் போட்டியின் 100 ஆவது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகம்மது ஷமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகம்மது சமி 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டியிருந்தார். இது எல்லோரும் செய்கிற சாதனைதானே, இதில் என்ன இருக்கிறது என பலரும் கேட்கலாம்.

ஆனால், முகமது ஷமி இந்தச் சாதனையை எட்ட பல கட்டமாக போராட வேண்டியிருந்தது. ஆம் அடிக்கடி காயம், சொந்த வாழ்கையில் மனைவியால் நேர்ந்த சர்ச்சை என பல இன்னல்களை அனுபவித்துள்ளார். மேலும், திடீரென பந்துவீச்சில் ஜொலிக்காமல் இடையே அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார் முகமுது ஷமி. ஆகையால்தான், இந்த 100 விக்கெட் சாதனை முகமது ஷமிக்கும் அவர்களுது ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஸ்பெஷல். முகமது ஷமி தோனி தலைமையிலான இந்திய அணிக்கு 2013 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது முதல் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். தன் பின்பு இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றார்.

ஷமியும், புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில்தான் அணிக்கு தேர்வானார்கள். இருவரும் அவுட் ஸ்விங், இன் ஸ்விங் செய்யும் அபார திறமைசாலிகள். இதில், ஷமி கொஞ்சம் கூடுதல் கெட்டிக்காரர். ஆம், அவுட் ஸ்விங், இன் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் யார்க்கர் வகை பந்துவீச்சிலும் வல்லவர். இதுதான் அண்மையில் ஆஸியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஷமி சிறப்பாக பந்து வீசியதற்கு காரணமாக இருந்தது. ஷமியின் "ஓப்பன் செஸ்ட்" ஸ்டைலில் ஓடி வந்து பந்துவீசும் முறை கொண்டவர் இல்லை. அவருடைய பவுலிங் ஸ்டைல் "க்ளோஸ்ட் செஸ்ட்" ஸ்டைல். அவருடைய பவுலிங் ஆக்ஷன் காரணமாகவே, அடிக்கடி காயம் காரணமாக அணியிலிருந்து விலக்கப்பட்டார் ஷமி.

உத்தரப்பிரதேசம் மாநிலம் குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஷமிதான் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தவர். கிரிக்கெட்டின் பரபரப்பான வாழ்கையில் இருந்த ஷமி, மாடலான ஹசின் ஜஹானை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு குழந்தையும் இருக்கிறது. ஆனால், கடந்தாண்டு ஹசின் ஜஹான், ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆம், 2018 ஷமி வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. மேலும், கார் விபத்தும் முகமது ஷமியை படுத்த படுக்கையாக்கியது. மேலும் மனைவியின் குற்றச்சாட்டுகள் ஷமியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரையும் தெரிவித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அதன் பிறகு ஷமி மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜீவனாம்சம் கோரி ஹசின் ஜஹான் இன்று மேற்குவங்கத்தில் உள்ள அலிபோர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னையும், தனது மகள் ஆய்ராக்கையும் பராமரிக்க ரூ15 லட்சம் மாதந்தோறும் வேண்டும் என்று கோரியுள்ளார். அதில் ஹசினுக்கு ரூ.10 லட்சம், மகள் ஆய்ராக்கிற்கு ரூ5 லட்சம் என இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த ஷமி "மனரீதியான டார்ச்சரை சந்தித்தேன், என் குடும்பத்துக்குப் பின்னால் யாரோ இருந்து சதி செய்கிறார்கள்’ என்று வேதனையடைந்தார். இவ்வளவு வேதனையில் இருந்த ஷமி, காயத்தில் இருந்து மீண்டார். பின்பு, கடுமையாக பயிற்சி செய்தார், மீண்டும் இந்திய அணியில் இணைந்தார், இப்போது 100 விக்கெட் சாய்த்தார், மேலும் சாதிப்பார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com