ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஷமி & சிராஜ்! பரிதாபமாக ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!

ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஷமி & சிராஜ்! பரிதாபமாக ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஷமி & சிராஜ்! பரிதாபமாக ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. தொடங்கப்பட்ட போட்டியில் இரண்டாவது ஓவரை வீச வந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிரவிஸ் ஹெட்டை போல்டாக்கி விக்கெட் கணக்கை தொடங்கி வைத்தார்.

5 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த போதிலும், மறுமுனையில் அதிரடி காட்டிய மிட்சல் மார்ஷ் விறுவிறுவென ஆஸ்திரேலியாவிற்கு ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். ஒருபுறம் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நிற்க, மறுபுறம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த மிட்சல் மார்ஷ் சிக்சர், பவுண்டரி என விளாசி அரைசதம் கடந்தார். பின்னர் பந்துவீச வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த, அடுத்து பந்துவீச வந்த ரவீந்திர ஜடேஜா ஒருவழியாக மிட்சல் மார்ஷ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் இருந்தாலும், அடுத்தடுத்து களத்திற்கு வந்த லபுசனே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் க்ரீன், மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ் போன்ற அனைத்து வீரர்களும் சோபிக்க தவறினர். பந்துவீச்சில் மிரட்டி அடுத்தடுத்து ஸ்டம்புகளை பறக்கவிட்ட முகமது ஷமி, ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு வில்லனாக மாறினார்.

இறுதியாக 35.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா வெறும் 188 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய சிராஜ் மற்றும் ஷமி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்தியா களமிறங்கி விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com