இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்... அஃப்ரிடி சொல்லும் 2 காரணங்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெறவே வாய்ப்புகள் அதிகம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கிரிக்கெட் போட்டிகளில் செயல்பாடு மற்றும் நீண்ட பேட்டிங் வரிசை போன்ற இரு காரணங்கள் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெல்ல பாகிஸ்தானை விட இந்திய அணிக்கே அதிகம் வாய்ப்பு இருப்பதாக ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணையதளத்தில் இதுதொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ள அஃப்ரிடி, தீவிர பாகிஸ்தான் ஆதரவாளராக நான் இருந்தாலும் களநிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கருத்தினை தெரிவித்துள்ளேன். பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சிறப்பான பங்களிப்பை அளித்து வருவது அனைவரும் அறிந்ததே. 2012ம் ஆண்டு ஆசியக்கோப்பை தொடரில் எங்கள் அணிக்கு (பாகிஸ்தான்) எதிராக அவர் சதமடித்தது இன்றும் எனது நினைவில் இருக்கிறது. அதேபோல 2015ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தினை அவர் அமைத்தார். எனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால், இந்திய அணி அதிக ரன்கள் குவிக்காமல் பாகிஸ்தான் அணியால் தடுக்க முடியும். எனது நண்பரான யுவராஜ் சிங் நீண்டநாட்களுக்குப் பின்னர் களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டிங்கே இந்திய அணியின் பலமாக நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில், தற்போதைய இந்திய அணி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் துடிப்பான அணியாக இருக்கிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணியில் அஸ்வின் தலைமையில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சமீபகாலங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். மொத்தமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இருப்பினும், போட்டி நடைபெறும் நாளில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்கமுடியாது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சி அளித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று அஃப்ரிடி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நாளை (ஜூன் 4) நடக்கிறது.