ஷபாலியை பின்னுக்கு தள்ளினார் ஆஸ்திரேலியாவின் மூனி !
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடம் பிடித்தார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்தி 5ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பெத் மூனி 54 பந்துகளில் 78 ரன்களை விளாசினார். எனவே ஐசிசி இன்று வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மாவை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்தார்.
நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 2 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். இதனால் கடந்த வாரங்களில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலிருந்த ஷபாலி, இப்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதேபோல இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட் அளவுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. அதனை தனது அசத்தலான பேட்டிங் மூலம் மாற்றியவர் மித்தாலி ராஜ். ஆனால் இவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். டி20 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து மித்தாலி ராஜ் விலகினார். அவருக்கு பதிலாகத்தான் டி20 அணியில் கடந்தாண்டு சேர்க்கப்பட்டார் 16 வயதேயான ஷெபாலி வர்மா, இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 164 ரன்களை குவித்தார்.